சென்னை: அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், சபாநாயகரின் செயல்பாடுகள் அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு எதிரானது என அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வும் தற்போதைய எம்பியுமான ஐ.எஸ். இன்பதுரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கட்சித் தாவல் தடைச் சட்டம் நிலுவையில் உள்ளபோது அவசரம் ஏன்?
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ஐ.எஸ். இன்பதுரை, சபாநாயகரின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளைக் கண்டித்துப் பின்வருமாறு சாடினார்:
“முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது, கட்சியின் கொறடா உத்தரவை மீறி 25 அதிமுக எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் (Anti-Defection Law) கீழ் தகுதி நீக்கம் செய்யக் கோரி எங்களது கொறடா அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார். அந்த மனு மீது எவ்வித விசாரணையும் நடத்தாமல், சபாநாயகர் காலந்தாழ்த்தி வந்தார்.”
மின்னல் வேக ராஜினாமா ஏற்பு:
“நிலைமை இப்படி இருக்க, தகுதி நீக்க நடவடிக்கைக்குப் பயந்து மாரகதம் குமரவேல், எஸ். ஜெயகுமார், பி. சத்தியபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்எல்ஏக்கள் திடீரென தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். பொதுவாக ராஜினாமா கடிதம் அளிக்கப்பட்டால், அது எவ்வித கட்டாயமும் இன்றி சுயமாகத்தான் அளிக்கப்பட்டதா என்பதை சபாநாயகர் தீர விசாரிக்க வேண்டும். ஆனால், எக்ஸ்பிரஸ் வேகத்தில், வெறும் சில நிமிடங்களிலேயே அவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு அரசிதழிலும் (Gazette) வெளியிட்டுள்ளார். இது முற்றிலும் திட்டமிடப்பட்ட சதி” என்று இன்பதுரை குற்றம் சாட்டினார்.
சபாநாயகர் நடுநில தவறிவிட்டார்:
அதிமுகவின் தகுதி நீக்க மனுவை கிடப்பில் போட்டுவிட்டு, எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் உடனடியாக ஏற்றது நடுநிலையான செயல் அல்ல என்று குறிப்பிட்ட அவர், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தனது அதிகார வரம்பையும், பதவியையும் அரசியல் ஆதாயத்திற்காகத் தவறாகப் பயன்படுத்துகிறார் எனத் தெரிவித்தார்.
மேலும், “இது 100 சதவீதம் திட்டமிடப்பட்ட குதிரை பேரம். கட்சித் தாவல் சட்டப் பாய்விலிருந்து தப்பிப்பதற்காகவே இந்த நாடகம் அரங்கேறியுள்ளது. சபாநாயகரின் இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, சட்டப் போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்படும்” என்றும் இன்பதுரை உறுதியளித்தார்.

