சென்னை:
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் அவர்களின் கடுமையான உழைப்பு, நேர மேலாண்மை மற்றும் அவரது எளிமையான குணம் குறித்துப் பிரபல தென்னிந்திய நடிகை மீனாட்சி சவுத்ரி அண்மைய பேட்டி ஒன்றில் பாராட்டு மழ பொழிந்துள்ளார்.
“நம்மோடு திரையில் பணிபுரிந்த ஒருவர் இன்று மாநிலத்தின் மிக உயரிய பதவியை அடைந்து வரலாறு படைத்து வருவது பெருமையாக உள்ளது” என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
நேரத்தை மதிக்கும் பண்பு:
நடிகர் விஜய்யுடன் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The GOAT) திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட மீனாட்சி சவுத்ரி கூறியதாவது:
“விஜய் அவர்களைப் போல ஒரு ஒழுக்கமான மனிதரை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை. படப்பிடிப்பின் போது காலை 7 மணி ஷாட் என்றால், சரியாக 7 மணிக்கு அவர் ஸ்பாட்டில் இருப்பார். பிறரின் நேரத்திற்கு அவர் கொடுக்கும் மதிப்பு அளப்பரியது. கேமராவுக்கு முன்னால் ‘ஆக்ஷன்’ என்று சொல்லும் வரை மிக அமைதியாகத் தன் வேலையில் மௌனமாக இருப்பார். ஆனால், ஆக்ஷன் சொன்ன அடுத்த நொடியே அந்த கதாபாத்திரமாக அப்படியே மாறி மிரட்டுவார்.”
முதலமைச்சரானதும் காட்டிய எளிமை:
சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது, அவருக்குத் தான் வாழ்த்து அனுப்பிய சுவாரசியமான சம்பவத்தையும் மீனாட்சி சவுத்ரி நினைவுகூர்ந்தார்.
“தேர்தல் முடிவுகள் வெளியாகி அவர் வெற்றி பெற்றவுடனேயே அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை மெசேஜ் மூலமாக அனுப்பினேன். அவர் மிகப்பெரிய அரசியல் தலைவர், மாநிலத்தின் முதலமைச்சர் என்பதால் அந்த பிஸியான சூழலில் எனது மெசேஜிற்குப் பதிலளிக்கச் சில நாட்கள் ஆகும் என்றுதான் நினைத்தேன். ஆனால், ஆச்சரியப்படும் விதமாக அடுத்த சில நிமிடங்களிலேயே ‘தேங்க்யூ’ (Thank You) என்று அவரிடமிருந்து எனக்குப் பதில் மெசேஜ் வந்தது. இந்த வயதிலும், இந்த உயரத்திலும் அவர் காட்டும் எளிமை என்னை வியக்க வைத்தது” என்று மீனாட்சி சவுத்ரி தெரிவித்துள்ளார்.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து குறுகிய காலத்தில் வரலாறு படைத்துள்ள முதலமைச்சர் விஜய் குறித்து சக நடிகை பகிர்ந்துள்ள இந்தத் தகவல்கள், தற்போது சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

