சென்னை:
வருகிற ஆகஸ்ட் 3-ம் தேதி (திங்கட்கிழமை) ஆடிப்பெருக்கு நன்னாளை முன்னிட்டு, தமிழகத்தில் பத்திரப்பதிவு செய்ய விரும்புவோரின் வசதிக்காகக் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக FAIRA அமைப்பின் நிறுவனரும் தேசியத் தலைவருமான டாக்டர் ஆ. ஹென்றி, தமிழ்நாடு பதிவுத்துறைத் தலைவருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
டோக்கன் தட்டுப்பாட்டைத் தவிர்க்க கோரிக்கை
அந்தக் கடிதத்தில், மங்களகரமான நாளாகக் கருதப்படும் ஆடிப்பெருக்கன்று தமிழகம் முழுவதும் புதிய சொத்துக்கள் வாங்குதல், விற்பனை செய்தல், குடும்பப் பாகப்பிரிவினை மற்றும் தானப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களைப் பதிவு செய்ய மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், வழக்கமான நாட்களில் வழங்கப்படும் டோக்கன்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், சார் பதிவாளர் அலுவலகங்களில் கடும் டோக்கன் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் சூழல் உருவாகிறது.
முக்கியக் கோரிக்கைகள்:
- கூடுதல் டோக்கன்கள்: அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் வழக்கத்தை விட அதிக அளவிலான முன்பதிவு டோக்கன்களை இணைய வழியில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- கூடுதல் பணியாளர்கள்: நெரிசலைக் கட்டுப்படுத்தவும் விரைவாக ஆவணங்களைப் பதிவு செய்யவும் கூடுதல் அலுவலர்களையும் பணியாளர்களையும் நியமிக்க வேண்டும்.
- தொழில்நுட்பச் சீரமைப்பு: பதிவின் போது ஏற்படும் சர்வர் மற்றும் இணையதளக் கோளாறுகளைத் தவிர்க்கத் தொழில்நுட்ப வசதிகளைத் தடையின்றி வைத்திருக்க வேண்டும்.
- அடிப்படை வசதிகள்: வெயிலின் தாக்கம் மற்றும் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, முதியவர்கள் மற்றும் பெண்களுக்குக் குடிநீர், இருக்கைகள் மற்றும் நிழற்பந்தல் வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும்.
“இந்த நடவடிக்கைகளைச் மேற்கொள்வதன் மூலம் பொதுமக்களின் நீண்ட நேரக் காத்திருப்பு தவிர்க்கப்படுவதோடு, அரசுக்குச் Stamp Duty மற்றும் பதிவுக் கட்டணம் மூலம் கணிசமான வருவாயும் கிடைக்கும். எனவே, பொதுமக்கள் யாரும் டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றமடையாத வகையில் பதிவுத்துறை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்” என்று டாக்டர் ஆ. ஹென்றி கேட்டுக் கொண்டுள்ளார்.

