டெஹ்ரான்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான தங்களின் அச்சுறுத்தலை ஈரான் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. டிரம்பை எங்கு, எப்படித் தாக்குவது என்பது போன்ற சித்தரிப்புகளுடன் கூடிய புதிய சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை ஈரான் நாட்டின் அரசு ஆதரவு பெற்ற ஊடகங்கள் மற்றும் அமைப்புகள் வெளியிட்டுள்ளன.
சர்ச்சை வீடியோவில் இருப்பது என்ன?
வெளியாகியுள்ள அந்த வீடியோவில், முன்னாள் ஈரானிய தளபதி காசெம் சுலைமானியின் படுகொலைக்குக் பழிவாங்கும் வகையில், அதிபர் டொனால்ட் டிரம்பை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்துவது போன்ற காட்சிகளும், “அவரை எங்கே கொல்வது?” என்ற கேள்வியுடன் கூடிய எச்சரிக்கை வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும், அமெரிக்காவின் முக்கியத் தலைவர்கள் மற்றும் ராணுவ மையங்களைக் கண்காணிப்பது போன்ற கிராபிக்ஸ் காட்சிகளும் அந்த வீடியோவில் சேர்க்கப்பட்டுள்ளன.
தொடரும் வரலாற்றுப் பகை
கடந்த 2020-ம் ஆண்டு ஈரானின் சக்திவாய்ந்த ராணுவத் தளபதி காசெம் சுலைமானி, டொனால்ட் டிரம்பின் உத்தரவின் பேரில் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்குப் பழிவாங்குவோம் என்று ஈரான் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
சமீபகாலமாக அமெரிக்கத் தலைவர்களுக்கு எதிரான ஈரானின் இந்தத் தொடர் எச்சரிக்கைகள் மற்றும் அச்சுறுத்தல்கள், சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான ராஜதந்திர உறவிலும், பாதுகாப்புச் சூழலிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

