புதுடெல்லி:
தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) பரிந்துரைகளின்படி, சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு ‘மும்மொழிக் கொள்கை’ (Three-Language Formula) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சான்றிதழைப் பெற 3-வது மொழியில் தேர்ச்சி பெறுவது இனி கட்டாயம் என்று மத்திய கல்வி வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய விதிகளின் முக்கிய அம்சங்கள்:
- சான்றிதழுக்குக் கட்டாயம்: 2027-28 கல்வியாண்டு முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தங்களது 3-வது மொழிக்கான (R3) பள்ளி அளவிலான உள்மதிப்பீட்டுத் தேர்வில் (Internal Assessment) கண்டிப்பாகத் தேர்ச்சி பெற வேண்டும். இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்களுக்கு 10ஆம் வகுப்பு ‘பாஸ்’ சான்றிதழ் (Secondary School Examination Pass Certificate) வழங்கப்படும்.
- பலகட்ட வாய்ப்புகள்: 9ஆம் வகுப்பில் 3-வது மொழித் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள், 10ஆம் வகுப்பிற்குத் தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள். அவர்கள் 10ஆம் வகுப்பில் படித்துக்கொண்டே அந்தப் பழைய தேர்வையும் எழுதலாம். ஒருவேளை 10ஆம் வகுப்பிலும் ஒரு மாணவர் இதில் தவறினால், பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகப் பள்ளி நிர்வாகம் அவருக்கு மறுதேர்வு (Reassessment) நடத்த வேண்டும்.
- இரு இந்திய மொழிகள் கட்டாயம்: மாணவர்கள் படிக்கும் மூன்று மொழிகளில், குறைந்தது இரண்டு மொழிகள் கட்டாயம் ஏதேனும் இரு ‘இந்திய மொழிகளாக’ (Bhartiya Bhashas) இருக்க வேண்டும். ஆங்கிலம் அல்லது வெளிநாட்டு மொழிகளைத் தேர்ந்தெடுப்பவர்கள், கூடுதலாக இரு இந்திய மொழிகளைப் படிக்க வேண்டும்.
தற்போதைய பேட்ச் மாணவர்களுக்கு விலக்கு:
இந்த புதிய மும்மொழிக் கொள்கை விதிகள் 2026-27 கல்வியாண்டில் 9ஆம் வகுப்பில் இணையும் மாணவர்களுக்கும், 2027-28 கல்வியாண்டில் 10ஆம் வகுப்பிற்குச் செல்லும் மாணவர்களுக்கும் மட்டுமே பொருந்தும். தற்போதைய (2026-27) கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு இந்த விதியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பழைய இருமொழி முறையிலேயே பொதுத்தேர்வு எழுதுவார்கள்.
“மாணவர்களின் பன்மொழித் திறனை வளர்க்கவும், இந்திய மொழிகளைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3-வது மொழிக்கு சிபிஎஸ்இ வாரியம் சார்பில் தனியாகப் பொதுத்தேர்வு நடத்தப்படாது; மாறாக, பள்ளிகளே இதற்கான உள்மதிப்பீட்டுத் தேர்வுகளை நடத்தும். ஆனால், அதில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.”
– மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை

