கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே நாரை ஏரியில் வண்டல் மண் எடுக்க விவசாயியிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் (கட்சி நிதி) கேட்டு மிரட்டியதாக எழுந்த புகாரில், தமிழக வெற்றிக் கழகத்தின் கடலூர் தெற்கு மாவட்ட இணை செயலாளர் புலவேந்திரன் கட்சியை விட்டு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
நடந்தது என்ன? காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கண்டமங்கலத்தைச் சேர்ந்த பா.ம.க மாவட்ட துணைச் செயலாளர் ராஜேஷ், நாரைகால் ஏரியில் வண்டல் மண் எடுக்க அரசிடம் முறையான அனுமதி பெற்றிருந்தார். அதன்படி, அவர் பொக்லைன் மற்றும் டிராக்டர்கள் மூலம் மண் எடுத்து வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த தவெக மாவட்ட இணை செயலாளர் புலவேந்திரன், “இப்போது நாங்கள்தான் அரசு, ஏரி மண் எடுப்பதால் கட்சி நிதியாக ₹1 லட்சம் தர வேண்டும்” என மிரட்டியுள்ளார். இதற்கு ராஜேஷ் மறுப்பு தெரிவிக்கவே, இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கார் முற்றுகை & வீடியோ வைரல்: தவெக நிர்வாகி லஞ்சம் கேட்ட தகவல் அப்பகுதியில் பரவியதால், ஆத்திரமடைந்த கண்டமங்கலம் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் திரண்டு வந்து புலவேந்திரனின் காரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த காட்சிகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் கண்டனத்தைப் பெற்றது.
கழகத் தலைமை அதிரடி நடவடிக்கை: இந்த விவகாரம் தவெக தலைமைக்குச் சென்றதை அடுத்து, கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் சீனுவாசன் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத் தலைமை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் ஒப்புதலோடு, புலவேந்திரன் கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்“ என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருடன் தவெக நிர்வாகிகள் யாரும் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
