சென்னை: இந்திய சினிமாவின் முன்னணி பான்-இந்திய நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, சமூக வலைதளங்களில் தங்களைப் பற்றி வெளியாகும் ஆதாரமற்ற கிசுகிசுக்கள் மற்றும் போலியான செய்திகள் குறித்து தனது ஆழ்ந்த வேதனையையும் அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதல் திருமணம் செய்துகொண்ட ராஷ்மிகா, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். பாலிவுட்டில் ஷாஹித் கபூர், கீர்த்தி சனோன் ஆகியோருடன் அவர் இணைந்து நடித்துள்ள ‘காக்டெயில்-2’ (Cocktail 2) திரைப்படம் கடந்த ஜூன் 19 அன்று வெளியாகி, இரண்டே நாட்களில் ரூ.53 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
எதைப்பேசினாலும் பயமாக இருக்கிறது: இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகாவிடம், சமூக வலைதளங்களில் திரை பிரபலங்கள் குறித்து வெளியாகும் கிசுகிசுக்கள் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் பற்றிக் கேட்கப்பட்டது.
அதற்கு ராஷ்மிகா அளித்த உணர்வுப்பூர்வமான பதில்:
“எதையும் பேசவே தற்போது பயமாக இருக்கிறது. நாம் எதைச் சொன்னாலும் அது வேறு மாதிரியாகப் போய்விடுகிறது. நாம் பேசாத சில விஷயங்களைக்கூட, நாமே பேசியதாகப் பரப்பி விடுகிறார்கள்.”
ஒவ்வொரு நாளும் ஒரு பீதி: மேலும் தனது மன உளைச்சல் குறித்துப் பேசிய அவர், “இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் காலையில் எழும்போது, ‘இன்று நம்மைப் பற்றி என்ன செய்தி வெளியாகியிருக்குமோ?’ என்ற ஒருவித பீதியுடனேயே இருக்க வேண்டியிருக்கிறது. சமூக வலைதளங்களின் வளர்ச்சி நல்லதுதான்; ஆனால் அதனைச் சிலர் இத்தகைய தவறான கண்ணோட்டத்தில் சுய லாபத்திற்காகப் பயன்படுத்துவதுதான் மிகவும் வேதனை அளிக்கிறது” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ‘தி கேர்ள் பிரெண்ட்’ திரைப்படத்திற்காகத் தெலுங்கானா அரசின் ‘கடார்’ சிறந்த நடிகை விருதைப் பெற்றிருந்த போது, “ஒரு காலத்தில் எனது நடிப்புக்காகக் கிண்டல் செய்யப்பட்டேன், இப்போது அதே நடிப்புக்காக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது” எனப் பேசியிருந்த ராஷ்மிகா, தற்போது வதந்திகளுக்கு எதிராக மீண்டும் தன் குரலை உயர்த்தியுள்ளது சினிமா வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

