சென்னை: பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொடூரக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரபு நாடுகளைப் போலத் தூக்குத் தண்டனை உள்ளிட்ட மிகக் கடுமையான சட்டங்களும், உடனடித் தண்டனைகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் சவுமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
சமீபகாலமாகப் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக ஆங்காங்கே அரங்கேறி வரும் அத்துமீறல்கள் மற்றும் குற்றச் சம்பவங்களைக் கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிகரிக்கும் கொடூரங்கள்; பயமற்ற குற்றவாளிகள்
பாமக தலைவர் சவுமியா அன்புமணி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நமது சமூகத்தில் பெண் குழந்தைகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. ஆனால், நாளுக்கு நாள் பிஞ்சு உள்ளங்கள் சிதைக்கப்படும் செய்திகள் நம் நெஞ்சை உலுக்குகின்றன. தற்போதைய சட்ட நடைமுறைகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, குற்றவாளிகள் எளிதில் தப்பித்துவிடலாம் என்ற எண்ணமே இதுபோன்ற கொடூரங்கள் தொடர்வதற்குக் காரணமாக அமைகிறது. சட்டத்தின் மீது அவர்களுக்கு எவ்வித அச்சமும் இருப்பதில்லை.”
அரபு நாடுகள் போன்ற கடுமையான சட்டம்
“பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களில் ஈடுபடுவோருக்குப் போக்சோ (POCSO) போன்ற சட்டங்கள் இருந்தாலும், வழக்கு விசாரணைகள் முடிந்து தண்டனை கிடைப்பதற்குப் பல ஆண்டுகள் ஆகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நேரத்தில் நீதி கிடைப்பதில்லை.
இந்த நிலை மாற வேண்டும் என்றால், அரபு நாடுகளில் பின்பற்றப்படுவதைப் போன்ற கடுமையான மற்றும் மிக விரைவான தண்டனை முறைகள் நம் நாட்டிலும் கொண்டு வரப்பட வேண்டும். பெண் குழந்தைகளைத் தொட்டாலே மரண தண்டனை அல்லது வாழ்நாள் முழுவதும் சிறை என்ற அச்சத்தைக் குற்றவாளிகளின் மனதில் விதைக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற கொடூர எண்ணம் கொண்டவர்கள் ஒடுக்கப்படுவார்கள். மத்திய, மாநில அரசுகள் உடனடியாகப் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இன்னும் கடுமையான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்” என்று சவுமியா அன்புமணி தனது அறிக்கையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

