மதுரை: “போதும் போதும்… லிஸ்ட்டே பெருசா போகுது!” என்று வடிவேலு பாணியில் கமெண்ட் அடிக்கும் அளவுக்கு, மதுரையைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (MLA) டாக்டர் சரவணனின் அரசியல் கட்சி மாற்றப் பட்டியல் தான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அவர் சமீபத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, அவர் இதுவரை மாறிய கட்சிகளின் பட்டியலை நெட்டிசன்கள் தூசி தட்டி எடுத்து மீம்ஸாகப் பறக்கவிட்டு வருகின்றனர்.
வைரலாகும் சரவணனின் ‘அரசியல் ஜர்னி’ லிஸ்ட்:
அரசியல் வட்டாரங்களில் “கட்சி மாறும் வித்தகர்” என்று கிண்டலடிக்கப்படும் அளவுக்கு, டாக்டர் சரவணன் கடந்து வந்த கட்சிகளின் பட்டியல் நீளமானது:
- மருதுபாண்டியர் பேரவை (அரசியல் நுழைவு)
- திமுக (மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக)
- மதிமுக (வைகோ தலைமையில்)
- பாஜக (பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ஐக்கியம்)
- மீண்டும் திமுக (மு.க. ஸ்டாலின் தலைமையில் – திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றார்)
- மீண்டும் பாஜக (மாநிலத் தலைவர் அண்ணாமலை/முருகன் முன்னிலையில் இணைந்து, மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி)
- அதிமுக (எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில்)
- தற்போது: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) (விஜய் முன்னிலையில் புதிய என்ட்ரி)
“இன்னும் எத்தனை கட்சிக்கு போவாரோ?” – மீம்ஸ் மழை:
பொதுவாக அரசியல்வாதிகள் ஒன்று அல்லது இரண்டு கட்சிகள் மாறுவது வழக்கம். ஆனால், சரவணன் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு தற்போது புதிதாகத் தொடங்கப்பட்ட தவெக வரை வந்து நின்றிருப்பதுதான் இணையவாசிகளுக்குப் பெரிய தீனியாக அமைந்துள்ளது.
நெட்டிசன்களின் கலகலப்பான கமெண்ட்டுகள்: “தமிழ்நாட்டில் இருக்குற எல்லா கட்சி லெட்டர் பேட்லயும் உங்க பேரு இருக்கும் போலயே அண்ணே!” என்றும், “கட்சி மாறியதை விட இந்த லிஸ்ட்ட படிச்சு முடிக்கவே அரை மணி நேரம் ஆகுது!” என்றும் மீம்களைப் போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
நள்ளிரவில் நிதியமைச்சர் தியாகராஜன் வீட்டிற்குச் சென்று பாஜாகவிலிருந்து விலகுவதாக அறிவித்த ‘மதுரை ஏர்போர்ட்’ சம்பவத்திற்குப் பிறகு, அதிமுகவில் சைலண்டாக இருந்த சரவணன், இப்போது தவெக-வில் இணைந்து புதிய இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார். இந்த ‘மெகா ட்ரான்ஸ்ஃபர்’ லிஸ்ட்டால் தவெக உடன்பிறப்புகளே சற்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாக மதுரை அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

