ஹைதராபாத்: சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘மா இண்டி பங்காரம்’ (Maa Inti Bangaram) திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரபல இயக்குனரும், சமந்தாவின் நெருங்கிய தோழியுமான நந்தினி ரெட்டி, சமந்தாவின் அசுர வளர்ச்சி மற்றும் அவரது நடிப்புத் திறன் குறித்துப் பெருமிதத்துடன் பாராட்டிப் பேசியுள்ளார்.
முன்னதாக சமந்தாவை வைத்து ‘ஜபர்தஸ்த்’, ‘ஓ பேபி’ போன்ற வெற்றிப் படங்களை நந்தினி ரெட்டி இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரெய்லர் விழாவில் நந்தினி ரெட்டி பேசியதாவது:
“சமந்தா நாளுக்கு நாள் ஒரு நடிகையாகவும், மனிதராகவும் வளர்ந்து கொண்டே இருக்கிறார். திரையுலகிற்கு வந்த ஆரம்ப காலத்தில் இருந்த பழைய சமந்தாவுக்கும், இப்போதைய சமந்தாவுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. அவரது முதிர்ச்சியும் அர்ப்பணிப்பும் அசாத்தியமானது.
இந்த ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் டிரெய்லரை நான் பார்த்தபோது, ஒரு இயக்குனராகவோ அல்லது தோழியாகவோ பார்க்கவில்லை; சமந்தாவின் ஒரு தீவிர ரசிகையாகவே மாறி, வியந்து பார்த்து ரசித்தேன்.”
ரசிகர்கள் வரவேற்பு: சமந்தாவின் கம்பேக் திரைப்படமாக பார்க்கப்படும் ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் சூழலில், நந்தினி ரெட்டியின் இந்தப் பாசமான பேச்சு சமந்தாவின் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. திரையுலகில் பல சோதனைகளைக் கடந்து சமந்தா பெற்றுள்ள இந்த வளர்ச்சிக்கு அவரது சினிமா வட்டாரமே வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.

