சென்னை: நடிகர் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் ரச்சிதா மகாலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படமான “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” (Lollipop Sports Academy) படத்தின் பூஜை விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

விளையாட்டு மற்றும் நகைச்சுவை பின்னணியில், குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படத்தை கே.ஆர். செந்தில்நாதன் எழுதி இயக்குகிறார். ‘காவியா புரொடக்ஷன்ஸ்’ மற்றும் ‘எஸ்2 மூவிஸ்’ பதாகையின் கீழ் பி. மஞ்சுநாத் இப்படத்தைத் தயாரிக்கிறார். சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இப்படத்தில் யாஷிகா ஆனந்த், ஒய்.ஜி.எம். மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், அஸ்மிதா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

பூஜை விழாவில் பேசிய நடிகை ரச்சிதா மகாலட்சுமி, “ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு கனவுப் படம் இருக்கும். அதுபோல் இந்தப் படம் இயக்குநர் செந்தில்நாதனுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. பல சவால்களைக் கடந்து இன்று பூஜை வரை வந்துள்ளோம். போஸ்டரைப் பார்த்துவிட்டு நான் உடற்பயிற்சி ஆசிரியர் வேடத்தில் நடிக்கிறேன் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள், படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் காத்துள்ளது,” என்று சுவாரசியமாகப் பகிர்ந்து கொண்டார்.

இப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்க, ஷிஹாப் பட்டாம்பி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு பணிகளை எஸ்.பி. அகமது கவனிக்கிறார். முதற்கட்டமாக குடகு (Coorg) மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பைத் தீவிரமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version