டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றத்தைத் தணிக்கவும், போர் நிறுத்தத்தைக் கொண்டு வரவும் தீவிர பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் சூழலில், தற்போதைக்கு ஒப்பந்தம் எதுவும் உடனடியாகக் கையெழுத்தாக வாய்ப்பில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஒப்பந்தத்திற்கான பெரும்பாலான நிபந்தனைகளில் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்ட போதிலும், அமெரிக்காவின் மாறிவரும் நிலைப்பாடே இதற்கு முக்கியக் காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
“இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெரும்பாலான முக்கிய விவகாரங்களில் இருதரப்பிலும் ஒரு சுமுகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆனால், அமெரிக்கா இந்த பேச்சுவார்த்தையில் மிகவும் முரண்பாடான முறையில் நடந்து கொள்கிறது. ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிலைப்பாடுகளில் இருந்து அமெரிக்கா அடிக்கடி பின்வாங்குவதுடன், புதிய நிபந்தனைகளை மாற்றி மாற்றி விதித்து வருகிறது. எனவே, பேச்சுவார்த்தை நீடித்தாலும், ஒப்பந்தம் உடனடியாகக் கையெழுத்தாகாது.”
பின்னணி: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆதரவு படைகளுக்கு இடையே மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், போர் ஏற்படுவதைத் தவிர்க்க சர்வதேச நாடுகள் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது. ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அமெரிக்காவின் ‘இரட்டை நிலைப்பாடு’ காரணமாக ஒப்பந்தம் தள்ளிப்போவதாக ஈரான் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.



