மாஸ்கோ / கிவ்: உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவை குறிவைத்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிலான மிகப்பெரிய ட்ரோன் (Drone) மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி அதிரடிப் புயலைக் கிளப்பியுள்ளது.

மாஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தீப்பற்றி எரிந்தது

ரஷ்யாவின் பாதுகாப்பு அரண்களைத் தகர்த்து நள்ளிரவில் புகுந்த உக்ரைனின் அதிநவீன ட்ரோன்கள், மாஸ்கோவின் மிக முக்கியமான கபோட்னோ (Kapotno) பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை (Oil Refinery) குறிவைத்துத் தாக்கின. இத்தாக்குதலால் அந்த சுத்திகரிப்பு நிலையம் பயங்கரத் தீப்பற்றி எரிந்தது. வானை முட்டும் அளவுக்குக் கரும்புகை சூழ்ந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மாஸ்கோ நகரின் 40 சதவீதத்திற்கும் அதிகமான எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும் இந்த நிலையம் தாக்கப்பட்டதால், ரஷ்யாவிற்குள் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

விமான நிலையம் மூடல் – மக்கள் வெளியேற்றம்

இந்த வரலாறு காணாத வான்வழித் தாக்குதல் காரணமாக மாஸ்கோவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமான ஷெரெமெட்டியேவோ (Sheremetyevo) உள்ளிட்ட 3 முக்கிய விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு, விமானங்கள் அனைத்தும் வேறு பகுதிக்குத் திருப்பி விடப்பட்டன. பாதுகாப்பு கருதி விமான நிலையத்திலிருந்து பயணிகள் அனைவரும் அவசர அவசரமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். ரஷ்ய வான் பாதுகாப்புப் படை சுமார் 180-க்கும் மேற்பட்ட உக்ரைன் ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார்.

“இது முற்றிலும் நியாயமான பதிலடி” – ஜெலன்ஸ்கி

இத்தாக்குதல் குறித்து அதிகாரப்பூர்வமாகப் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, “எங்களது நகரங்கள் மீதும், வரலாற்றுச் சிறப்புமிக்க கலாச்சார மையங்கள் மீதும் ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் கொடூரத் தாக்குதல்களுக்கு இது முற்றிலும் நியாயமான மற்றும் தகுந்த பதிலடி (Just Response) ஆகும். ரஷ்யாவின் போர் இயந்திரத்திற்கு நிதியுதவி செய்யும் மற்றும் ஆதரவளிக்கும் உள்கட்டமைப்புகள் மீது எங்கள் வீரர்கள் நடத்திய இந்தத் தாக்குதல் மிகவும் முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சர்வதேச தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்த சில மணி நேரங்களுக்கு முன்பு, மாஸ்கோவின் இதயப் பகுதியிலேயே உக்ரைன் இந்த அதிரடித் தாக்குதலை நடத்தியிருப்பது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version