மதுரை: தமிழ்நாடு மின்சாரத்துறையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற முறைகேடுகள், நஷ்டங்கள் மற்றும் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு நிலை குறித்த விரிவான வெள்ளை அறிக்கை இன்னும் இரண்டு நாட்களில் (அடுத்த வாரத் தொடக்கத்தில்) பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை அவனியாபுரத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான கபடிப் போட்டியைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
முந்தைய ஆட்சியில் நடந்த முறைகேடுகள்
செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது: “கடந்த ஐந்து ஆண்டுக்கால முந்தைய ஆட்சியில் மின்சாரத்துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் மிகக் கடுமையான முறைகேடுகளும் ஊழல்களும் அரங்கேறியுள்ளன. உதாரணமாக, ஒரே ஐபி (IP) முகவரியைப் பயன்படுத்திப் பல நிறுவனங்கள் ஒரே விலைக்கு டிரான்ஸ்பார்மர்கள் (மின்மாற்றிகள்) வாங்க டெண்டர் எடுத்துள்ளன. ₹7 லட்சம் முதல் ₹8 லட்சம் மதிப்புள்ள டெண்டர்கள் 30% முதல் 50% வரை திட்டமிட்டே உயர்த்தப்பட்டு அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தற்போது சிபிஐ (CBI) விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.”
புரோக்கர்கள் ராஜ்ஜியம் ஒழிப்பு; புதிய ஆன்லைன் போர்டல்
“குறிப்பாக நெல்லை மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (சூரிய ஒளி மற்றும் காற்று ஆலை) பிரிவுகளில் இடைத்தரகர்கள் மற்றும் புரோக்கர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. 1 மெகாவாட் மின் இணைப்பு பெறுவதற்குக் கூட ₹25 லட்சம் வரை கமிஷன் கேட்கப்பட்டு, பணம் கொடுத்தும் பலருக்கு இன்னும் இணைப்பு வழங்கப்படவில்லை.
இந்த லஞ்ச கலாச்சாரத்தை ஒழிக்க, உடுமலைப்பேட்டை மற்றும் நெல்லை மையங்கள் மூடப்பட்டு அனைத்தும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின்படி, இன்னும் 10 நாட்களில் முற்றிலும் வெளிப்படையான புதிய ஆன்லைன் போர்டல் (Transparent Portal) அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் புதிய முதலீட்டாளர்கள் எவ்வித லஞ்சமும் இன்றி நேரடியாக விண்ணப்பித்து மின் இணைப்பு பெற முடியும்” என்றும் அமைச்சர் கூறினார்.
15,000 ஒப்பந்த ஊழியர்கள் நியமனம்
மின்வாரியத்தின் தற்போதைய நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் அதே வேளையில், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், பணியாளர்கள் பற்றாக்குறையைப் போக்கவும் இந்த ஆண்டு முதற்கட்டமாக 15,000 நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் (Contract Basis) பணிக்கு எடுக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், வெளியிடப்படவிருக்கும் வெள்ளை அறிக்கையானது கடந்த 5 ஆண்டுகால செயல்பாடுகளை அதற்கு முந்தைய 10 ஆண்டுகளுடன் ஒப்பிட்டு, மின்சார வாரியத்தின் உண்மையான நிலையைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.


