சென்னை: அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சுவிட்சர்லாந்தில் தொடங்கி நடைபெற்று வரும் மிக முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தையைச் சீர்குலைக்கும் உள்நோக்கத்தோடு, ஈரானின் நட்பு நாடான லெபனான் மீது இஸ்ரேல் ராணுவத் தாக்குதல் நடத்தி வருவதற்குக் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், அமைதியைச் சீர்குலைக்கும் இஸ்ரேலின் இந்தச் சூழ்ச்சிகரமான நடவடிக்கையை மத்திய பாஜக அரசு உடனடியாகக் கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அமைதி திரும்பும் சூழலில் இஸ்ரேலின் அத்துமீறல்

கம்யூனிஸ்ட் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளின் தொடர் மத்தியஸ்த முயற்சிகளாலும், உலக சமாதான அமைப்புகளின் தொடர் போராட்டங்களாலும் அமெரிக்கா – ஈரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் மேற்காசியாவில் (மத்திய கிழக்கு நாடுகள்) அமைதி திரும்பும் சூழல் உருவாகியிருந்தது.

மேலும், உலக நாடுகளின் பெரும் கவலையாக இருந்த ஹார்முஸ் ஜலசந்தி சரக்குக் கப்பல் போக்குவரத்திற்குத் திறக்கப்பட்டு, உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வுப் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு பிறக்கும் நிலையும் ஏற்பட்டது. இந்தச் சுமுகமான சூழலின் தொடர்ச்சியாக, அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகள் சுவிட்சர்லாந்தில் தொடங்கியுள்ளன. ஆனால், இந்த அமைதி முயற்சிகளை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்ற நோக்கில் இஸ்ரேல் தற்போது லெபனான் மீது ராணுவத் தாக்குதலைத் தொடுத்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.”

லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

“மேற்காசியப் பிராந்தியத்தில் மீண்டும் போர்ப் பதற்றம் நீடிப்பது அங்கு பணியாற்றி வரும் லட்சக்கணக்கான இந்தியர்கள், குறிப்பாகத் தமிழகத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும்.

உலகளாவிய பொருளாதார அமைதிக்கும், இந்தியர்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் இஸ்ரேலின் இந்தத் தன்னிச்சையான போர்ப் போக்கை மத்திய மோடி அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. உலக அரங்கில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின்படி, அமைதியைச் சீர்குலைக்கும் இஸ்ரேலின் நடவடிக்கையை மத்திய அரசு பகிரங்கமாகக் கண்டிக்க வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பாக மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version