சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதையில், நள்ளிரவில் சிறுத்தை ஒன்று கொண்டை ஊசி வளைவுச் சாலையில் ஒய்யாரமாகப் படுத்திருந்த நிகழ்வு வாகன ஓட்டிகளிடையே பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மலைப்பாதையில் சிறுத்தை: சத்தியமங்கலத்திலிருந்து கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாகத் திம்பம் மலைப்பாதை விளங்கி வருகிறது. இந்த மலைப்பாதையில் மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியின் வழியாக இந்தச் சாலை அமைந்திருப்பதால், இரவு நேரங்களில் யானை, சிறுத்தை, மான் போன்ற வனவிலங்குகள் சாலையைக் கடப்பது வழக்கமான ஒன்று.

வாகன ஓட்டிகள் எடுத்த வீடியோ: இந்நிலையில், நேற்று நள்ளிரவு திம்பம் மலைப்பாதையின் 25-வது கொண்டை ஊசி வளைவுச் சாலையில் சிறுத்தை ஒன்று நடுரோட்டில் அசால்ட்டாகப் படுத்துக் கிடந்துள்ளது. அந்த வழியாக வாகனங்களில் சென்ற பயணிகள், சிறுத்தையைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். காரின் முகப்பு வெளிச்சத்தில் சிறுத்தை படுத்திருப்பதைச் சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்தனர்.

சிறிது நேரம் சாலையிலேயே படுத்திருந்த அந்தச் சிறுத்தை, வாகனங்களின் சத்தம் கேட்டு மெதுவாக எழுந்து அருகில் இருந்த அடர்ந்த புதருக்குள் மறைந்து சென்றது. அதன் பின்னரே வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன.

வனத்துறை எச்சரிக்கை: திம்பம் மலைப்பாதையில் சிறுத்தையின் நடமாட்டம் அடிக்கடி காணப்படுவதால், வாகன ஓட்டிகள் யாரும் நள்ளிரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்தவோ, கீழே இறங்கி புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவோ வேண்டாம் என வனத்துறையினர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version