சென்னை: தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ள மாநில நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை ஒரு “வெற்று அறிக்கை” என்றும், தங்களின் நிர்வாகத் திறமையின்மையை மறைக்கவே தவெக அரசு இந்த நாடகத்தை நடத்தியுள்ளது என்றும் முன்னாள் நிதியமைச்சரும் திமுக மூத்த நிர்வாகியுமான தங்கம் தென்னரசு கடுமையாகச் சாடியுள்ளார்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, மாநிலத்தின் நிதிநிலை மற்றும் கடந்த கால கடன் சுமைகள் குறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதில், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் கடன் இருமடங்காக அதிகரித்து, ரூ. 13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
தவெக அரசின் இந்த நிதிநிலை அறிக்கைக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ள திமுக, அரசின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, தவெக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்:
“தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே சட்டமன்ற நிதிநிலை அறிக்கைகளில் (Budget) தெளிவாக விளக்கி கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், தேர்தலில் ‘வாணவேடிக்கை வாக்குறுதிகளை’ அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றிப் பொறுப்பிற்கு வந்துள்ள இந்த தவெக அரசு, தங்களின் நிர்வாகத் திறமையின்மையாலும், ஆழம் தெரியாமல் காலைவிட்டு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும் ‘புஸ்வானமாக’ மாறிவிட்டது. இதனை மறைக்க, ‘ஹைப்’ ஏற்றிய அறிக்கை ஒன்றினை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு, அதனையும் தற்போது ‘ஃப்ளாப்’ ஆக்கியிருக்கிறார்கள்.”
மேலும், அரசை நோக்கி அவர் விடுத்துள்ள அரசியல் சவாலில்:
“கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கி விடுவார்களோ என அஞ்சி, மக்களின் கோபக் கனலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் உத்தியாக (Escapism) இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதி அளிக்கும் போது வராத ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள், இப்போது ஆட்சியில் அமர்ந்தவுடன் எங்கிருந்து வந்தன? இது திட்டமிட்ட ஏமாற்று வேலை. இதற்கான தகுந்த, விரிவான விளக்கங்களை விரைவில் ஆதாரங்களுடன் வெளியிடுவேன்,” என்று சவால் விடுத்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, திமுக மற்றும் ஆளும் தவெக இடையே நேரடியாக வெடித்துள்ள இந்த ‘வெள்ளை அறிக்கை’ விவகாரம், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.


