லண்டன்: சர்வதேச டென்னிஸ் அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக, கடந்த 2023-ம் ஆண்டு விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற செக் குடியரசின் முன்னணி வீராங்கனை மார்கெட்டா வோண்ட்ரூசோவா (Marketa Vondrousova), ஊக்கமருந்து சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்ததற்காக (Refusing Doping Test) 4 ஆண்டுகள் விளையாட அதிரடியாக தடை செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச டென்னிஸ் நேர்மை முகமை (ITIA) இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த தடையின் காரணமாக, 26 வயதான வோண்ட்ரூசோவா வருகிற 2030-ம் ஆண்டு ஜூன் 21 வரை கிராண்ட்ஸ்லாம் உட்பட எந்தவொரு தொழில்முறை டென்னிஸ் போட்டிகளிலும் விளையாடவோ, பயிற்சியாளராகச் செயல்படவோ முடியாது.

நடந்தது என்ன? கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி இரவு 8 மணியளவில், வோண்ட்ரூசோவாவின் வீட்டிற்கு போட்டிக்கு வெளியேயான வழக்கமான பரிசோதனைக்காக (Out-of-competition test) பெண் ஊக்கமருந்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் சென்றுள்ளார். அப்போது, வோண்ட்ரூசோவா தனது செல்லப் பிராணியான நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லத் தயாராகியுள்ளார். அவரிடம் சோதனைக்கான மாதிரியைக் (Sample) கேட்டபோது, அவர் அதைத் தர திட்டவட்டமாக மறுத்து, அதற்கான மறுப்புப் படிவத்தில் (Refusal Form) கையெழுத்திட்டுள்ளார்.

விளக்கத்தை நிராகரித்த தீர்ப்பாயம்: இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட சுயாதீன தீர்ப்பாயத்தின் (Independent Tribunal) விசாரணையின் போது வோண்ட்ரூசோவா தரப்பில், “கடந்த சில மாதங்களாகவே கடுமையான உடல் மற்றும் மன அழுத்தத்தில் இருந்தேன். இரவு நேரத்தில் அதிகாரி ஒருவர் முறையாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் கதவைத் தட்டியபோது எனக்குக் கடுமையான பயமும், மனப் பதற்றமும் (Acute stress reaction) ஏற்பட்டது. எனது பாதுகாப்பு குறித்த அச்சத்தில்தான் நான் மாதிரியைத் தர மறுத்தேன். நான் எனது வாழ்நாளில் எப்போதும் ஊக்கமருந்து பயன்படுத்தியது இல்லை” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இருப்பினும், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த தீர்ப்பாயம், சோதனையைத் தவிர்ப்பதற்கு வோண்ட்ரூசோவா கூறிய காரணங்கள் போதுமானதாகவோ அல்லது கட்டாயப்படுத்துவதாகவோ இல்லை என்று கூறி, விதிகளின்படி அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து தீர்ப்பளித்தது.

கடுமையான விதிகள்: உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (WADA) விதிகளின்படி, ஒரு வீரர் ஊக்கமருந்து சோதனைக்கு மாதிரி கொடுக்க மறுப்பது அல்லது சோதனையைத் தவிர்ப்பது என்பது, ஊக்கமருந்து சோதனையில் ‘பாசிட்டிவ்’ (Positive) என்று முடிவு வருவதற்கு இணையான குற்றமாகக் கருதப்பட்டு, அதே அளவிலான கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2023 விம்பிள்டன் தொடரில் தரவரிசை பெறாத வீராங்கனையாகக் களம் இறங்கி, இறுதிப்போட்டியில் ஓன்ஸ் ஜாபரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த வோண்ட்ரூசோவாவிற்கு, இந்த 4 ஆண்டு கால தடை அவரது டென்னிஸ் வாழ்க்கையில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் (CAS) மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version