புதுக்கோட்டை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மாற்றுக்கட்சிகளுக்குத் தாவி வரும் நிலையில், முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் அடுத்த வாரம் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்புத் தகவல் பரவி வருகிறது.

சமீபத்தில் கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க-வில் இணைந்தனர். அந்த வரிசையில் தற்போது சி.விஜயபாஸ்கரின் பெயரும் அடிபடத் தொடங்கியுள்ளது.

எடப்பாடி பழனிசாமியுடன் மோதல்?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியவர்களில் விஜயபாஸ்கரும் ஒருவர் எனக் கூறப்படுகிறது. மேலும், அவரது புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு புதிய நிர்வாகி நியமிக்கப்பட்டதால், அவர் கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாகக் தெரிகிறது.

இதன் காரணமாக, தனது ஆதரவாளர்கள் மற்றும் விராலிமலை தொகுதி முக்கிய நிர்வாகிகளுடன் அவர் அண்மையில் தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது, “தொகுதி மக்கள் மற்றும் தொண்டர்களின் விருப்பப்படியே எனது அடுத்தகட்ட அரசியல் முடிவு இருக்கும்” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

த.வெ.க-வா? தி.மு.க-வா? – நீடிக்கும் சஸ்பென்ஸ்

இதற்கிடையே, விராலிமலை தொகுதி முழுவதும் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக த.வெ.க மற்றும் வி.ஜே.பி நிர்வாகிகள் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். எனினும், த.வெ.க-வில் இணைவதில் சில சீனியாரிட்டி மற்றும் கட்சிப் பதவி தொடர்பான இழுபறிகள் நீடிப்பதால், அவர் தி.மு.க மேலிடத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மாற்றுத் தகவல்களும் உலா வருகின்றன.

மறுபுறம், இந்தத் தகவல்கள் அனைத்தும் வெறும் அரசியல் யூகங்கள் மட்டுமே என்று கூறி விஜயபாஸ்கர் தரப்பு இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எதுவாக இருந்தாலும், அடுத்த வாரம் அவர் எடுக்கப்போகும் அதிரடி முடிவைப் பொறுத்தே அதிமுகவில் விழப்போகும் ‘அடுத்த விக்கெட்’ எது என்பது உறுதியாகும் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version