ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைக் கிராமங்களுக்குள், சத்தியமங்கலம் புலிகள் காப்பகக் காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று திடீரெனப் புகுந்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே தாளவாடி மலைப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஒற்றை யானை விவசாய நிலங்களுக்குள் புகுந்து விளைச்சலைச் சேதப்படுத்தியுள்ளது அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவில் புகுந்த யானை – பயிர்கள் நாசம்

தாளவாடி அடுத்த ஜீஹள்ளி மற்றும் அரல்வாடி காப்புக்காடு பகுதியில் இருந்து நள்ளிரவில் வெளியேறிய இந்த ஒற்றை யானை, அருகில் உள்ள விவசாயக் கிராமங்களுக்குள் நுழைந்தது. அங்குள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த ராகி, சோளம் மற்றும் கரும்புப் பயிர்களை அது மிதித்துச் சேதப்படுத்தியது.

மேலும், தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சொட்டுநீர்ப் பாசனக் குழாய்கள் மற்றும் மின் மோட்டார் பம்புகளையும் அந்த யானை உடைத்து நொறுக்கியுள்ளது. அதிகாலையில் தோட்த்திற்குச் சென்ற விவசாயிகள், யானை நிற்பதைக் கண்டு அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறையினர் மிரட்டல் வேட்டை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜீஹள்ளி வனச்சரக ஊழியர்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள், கிராம மக்களின் உதவியுடன் பட்டாசுகளை வெடித்தும், மேளங்களை அடித்தும் யானையை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு யானை தற்காலிகமாகக் காட்டுக்குள் சென்ற போதிலும், அது மீண்டும் கிராமத்திற்குள் வர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்:

“கோடைக் காலம் முடிந்து தற்போது மழை பெய்து வரும் நிலையிலும், காடுகளுக்குள் போதிய உணவு கிடைக்காததால் யானைகள் தொடர்ந்து கிராமங்களை நோக்கிப் படையெடுக்கின்றன. நாங்கள் பல மாதங்கள் பாடுபட்டு வளர்த்த பயிர்கள் ஒரே இரவில் தரைமட்டமாகி விடுகின்றன.

இந்த ஒற்றை யானை கடந்த சில நாட்களாகவே இதே பகுதியில் சுற்றித் திரிவதால், எப்போது மனிதர்களைத் தாக்கும் என்ற பயத்தில் இரவு நேரங்களில் எங்களால் நிம்மதியாகத் தூங்க முடிவதில்லை. அரசு எங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்குவதோடு, அகழிகளைச் சீரமைக்க வேண்டும்,” என வலியுறுத்தினர்.

யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வனத்துறையினர் தாளவாடி மற்றும் அதன் எல்லைக் கிராமங்களில் இரவு நேர ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், பொதுமக்கள் யாரும் நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் தனியாகத் தோட்டங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும், எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version