சென்னை:

தமிழக அரசியல் வரலாற்றில் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டிற்குப் பிறகு (74 ஆண்டுகள்) மீண்டும் ஒரு ‘கூட்டணி ஆட்சி’ யுகம் மலர்ந்துள்ளது. கடந்த 1952-ம் ஆண்டுக்குப்பின், தற்போது 2026-ல் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாட்டில் புதிய கூட்டணி அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது.

சுதந்திர இந்திய வரலாற்றில் தமிழக அரசியல் களம் கண்டிராத ஒரு புதிய அரசியல் திருப்புமுனையாக இது பார்க்கப்படுகிறது.

1952 முதல் 2026 வரை – வரலாற்றுப் பின்னணி:

இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற 1952-ம் ஆண்டு, அப்போதைய சென்னை மாகாணத்தில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது ஆளுநராக இருந்த ஸ்ரீபிரகாசா, சி.ராஜகோபாலாச்சாரியாரை (ராஜாஜி) ஆட்சி அமைக்க அழைத்தார். ராஜாஜி பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவோடு ஒரு கூட்டணி அரசை வழிநடத்தினார்.

அதன்பின்னர், கடந்த பல தசாப்தங்களாகத் தமிழ்நாட்டில் தனிப் பெரும்பான்மை பெற்ற ஒற்றைக் கட்சி ஆட்சிகளே (திமுக அல்லது அதிமுக) நடைபெற்று வந்தன. தற்போதைய 2026 அரசியல் சூழலில், அந்த நீண்டகால அரசியல் மரபு உடைக்கப்பட்டு, முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி அரசு அரியணை ஏறியுள்ளது.

புதிய அரசியல் அத்தியாயம்:

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தற்போதைய அரசியல் சூழலில் கூட்டணிக் கட்சிகளையும் அரவணைத்து, அமைச்சரவையில் அவர்களுக்கும் அதிகாரப் பகிர்வு வழங்கி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணி அமைச்சரவையை அமைத்துள்ளார்.

கிட்டத்தட்ட 74 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் உருவாகியுள்ள இந்தக் கூட்டணியாட்சி முறை, தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. கூட்டுப் பொறுப்புடன் அமையவுள்ள இந்த புதிய அரசு, மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version