சென்னை: தொழில் துறை உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவதில் தமிழ்நாடு அரசு முன்னணி மாநிலமாகத் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.
‘இன்வெஸ்ட் இந்தியா’ (Invest India) தரவுகளின்படி, மாநிலத்தின் தொழில் துறை வளர்ச்சி மற்றும் அந்நிய நேரடி முதலீடுகள் (FDI) குறித்த முக்கிய சாதனைகள் தற்போது வெளியாகியுள்ளன.
மாநிலத்தின் முக்கியச் சாதனைகள்:
- $19.34 பில்லியன் FDI முதலீடு: அக்டோபர் 2019 முதல் மார்ச் 2026 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு 19.34 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான அந்நிய நேரடி பங்கு முதலீடுகளை (FDI Equity Inflow) ஈர்த்துத் தடம் பதித்துள்ளது.
- இந்தியாவின் 15.43% தொழிற்சாலைகள்: நாட்டின் மொத்த தொழிற்சாலைகளில் 15.43% தொழிற்சாலைகளைத் தன்வசம் கொண்டு, இந்தியாவின் முதன்மை உற்பத்தி மையமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.
- நிதி ஆயோக் தரவரிசையில் 3-வது இடம்: மத்திய நிதி ஆயோக் (NITI Aayog) வெளியிட்ட ‘முதலீட்டுக்கு உகந்த மாநிலங்கள் தரவரிசை 2026’ (Investment Friendliness Index 2026) பட்டியலில் தமிழ்நாடு 53.3 புள்ளிகளுடன் தேசிய அளவில் 3-வது இடத்தை அடைந்துள்ளது.
- உட்கட்டமைப்பில் முதலிடம்: இதே நிதி ஆயோக் அறிக்கையில், பெரிய மாநிலங்களுக்கான ‘உட்கட்டமைப்பு’ (Infrastructure) பிரிவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாட்டின் வலுவான தொழில்நுட்பக் கல்வி அமைப்பு, சீரான மின்சார விநியோகம், சிறந்த துறைமுக மேலாண்மை மற்றும் Biz Buddy போன்ற டிஜிட்டல் தளங்கள் வாயிலாக முதலீட்டாளர்களின் தேவைகளை விரைவாக நிறைவேற்றுவது ஆகியவை இந்த மாபெரும் வளர்ச்சிக்குக் முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.
