புதுடெல்லி: இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரும், ஒலிம்பிக் பதக்க வெற்றியாளருமான நீரஜ் சோப்ரா, ஜூன் 19 அன்று நடைபெறவுள்ள புகழ்பெற்ற தோஹா டயமண்ட் லீக் (Doha Diamond League 2026) தொடரில் பங்கேற்க மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் நீரஜ் சோப்ரா இந்தத் தொடரைத் தவறவிடுவது இதுவே முதல்முறையாகும்.

தோஹா டயமண்ட் லீக் அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ள வீரர்களின் இறுதிப் பட்டியலில் நீரஜ் சோப்ராவின் பெயர் இடம்பெறவில்லை. இது அவரது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விலகியதற்கான காரணம் என்ன?

கடந்த சில காலமாக முதுகுவலியால் (Back Injury) அவதிப்பட்டு வரும் நீரஜ் சோப்ரா, தற்போது அதற்கான தீவிர மறுவாழ்வு மற்றும் உடற்தகுதிப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவர் சுவிட்சர்லாந்தின் பியென்னே (Bienne) நகரில் உள்ள ஒலிம்பிக் பயிற்சி மையத்தில் 47 நாட்கள் கொண்ட சிறப்புப் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளார்.

இந்த ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் அடுத்தடுத்து காமன்வெல்த் போட்டிகள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற மெகா தொடர்கள் நடைபெற உள்ளதால், அதில் முழு உடற்தகுதியுடன் பங்கேற்பதை நோக்கமாகக் கொண்டு, தோஹா தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார்.

தோஹாவுடன் இருக்கும் வரலாற்றுப் பிணைப்பு

தோஹா மைதானம் நீரஜ் சோப்ராவிற்கு மிகவும் ராசியான ஒன்றாகக் கருதப்படுகிறது. கடந்த 2023-ல் இங்கு நடைபெற்ற தொடரில் முதலிடம் பிடித்த அவர், கடந்த ஆண்டு (2025) நடைபெற்ற தோஹா டயமண்ட் லீக்கில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தனது வாழ்நாளின் சிறந்த சாதனையை (தேசிய சாதனை) இங்குதான் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீரஜ் சோப்ரா நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான தனது சர்வதேசப் போட்டிகளை இன்னும் தொடங்காத நிலையில், அவர் விரைவில் முழுத் தகுதியுடன் களம் திரும்புவார் என அவரது பயிற்சியாளர் குழு தெரிவித்துள்ளது. தோஹா தொடரில் நீரஜ் சோப்ரா இல்லாவிட்டாலும், பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், இலங்கையின் ருமேஷ் பத்திரகே உள்ளிட்ட உலகின் முன்னணி வீரர்கள் பலரும் இத்தொடரில் பங்கேற்கின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version