லியோனல் மெஸ்ஸி — இந்த ஒரு பெயர் போதும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் நரம்புகளை புடைக்கச் செய்ய! நவீன கால்பந்து விளையாட்டின் வாழும் ஜாம்பவானும், ‘G.O.A.T’ (Greatest Of All Time) என்று உலகத்தாரால் போற்றப்படும் அர்ஜென்டினாவின் சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி இன்று (ஜூன் 24, 2026) தனது 39-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துகளை மழையெனப் பொழிந்து வருகின்றனர்.
ரோசாரியோ டூ உலகக் கோப்பை: ஒரு காவியப் பயணம்
அர்ஜென்டினாவின் ரோசாரியோ நகரில் 1987-ஆம் ஆண்டு பிறந்த மெஸ்ஸி, சிறு வயதில் ‘Growth Hormone Deficiency’ என்ற வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டார். ஆனால் அவரது அசாத்திய திறமையைக் கண்ட பார்சிலோனா கால்பந்து கிளப் (FC Barcelona) அவரது மருத்துவச் செலவை ஏற்றுக்கொண்டு, தங்களது புகழ்பெற்ற ‘லா மாசியா’ கால்பந்து அகாடமியில் சேர்த்தது. அதன்பின்னர் மெஸ்ஸி படைத்ததெல்லாம் உலகக் கால்பந்து வரலாற்றின் பொன்னெழுத்துக்கள்!
சாதனைகளின் ஒற்றை முகவரி
கால்பந்து மைதானத்தில் பந்தை தனது கால்களுக்குள் காந்தம்போல ஒட்டவைத்து, எதிரணி தற்காப்பு வீரர்களை ஏமாற்றி அவர் அடிக்கும் மாயாஜால கோல்கள் தனி ரகம். மெஸ்ஸியின் சில வியக்கத்தக்க சாதனைகள்:
- 8 பாலன் டி ஓர் விருதுகள்: உலகின் மிக உயரிய ‘பாலன் டி ஓர்’ (Ballon d’Or) விருதை 8 முறை வென்ற ஒரே வீரர் இவரே.
- 45 உலகளாவிய கோப்பைகள்: பார்சிலோனா, பிஎஸ்ஜி (PSG), இன்டர் மியாமி மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்காக விளையாடி வரலாற்றிலேயே அதிக கோப்பைகளை வென்ற வீரராகத் திகழ்கிறார்.
- கனவு நனவான 2022 உலகக் கோப்பை: 2022-ல் கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடரில் அர்ஜென்டினா அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்து, தனது வாழ்நாள் கனவை நனவாக்கினார்.
தொடரும் ‘மெஸ்ஸி’ மேஜிக்
தற்போது 39 வயதிலும் தனது அசாத்திய ஃபார்மை இழக்காத மெஸ்ஸி, அமெரிக்காவின் ‘இன்டர் மியாமி’ கிளப் அணிக்காக விளையாடி அங்கும் கோப்பைகளை வென்று தந்து வருகிறார். “வயது என்பது வெறும் நம்பர் தான்” என்பதை நிரூபிக்கும் வகையில் தற்போதும் அர்ஜென்டினா தேசிய அணியை வழிநடத்தி வரும் இந்த கால்பந்து மந்திரவாதிக்கு, மாலை மலர் விளையாட்டுப் பிரிவு சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!


