சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நடைபெற்ற காதணி விழா கிடா விருந்தின்போது, எதிர்பாராத விதமாகக் கதண்டு வண்டுகள் கடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 25 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகேயுள்ள ஏ.துலுக்கபட்டி கிராமத்தில் ஒரு குடும்பத்தினரின் காதணி விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி, அங்குள்ள தோட்டம் ஒன்றில் உறவினர்கள் மற்றும் ஊர்ப் பொதுமக்களுக்குப் பிரம்மாண்டமான முறையில் கிடா விருந்து உபசரிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விருந்து நேரத்தில் நேர்ந்த விபரீதம்: விருந்தினர் அனைவரும் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த சமயத்தில், அருகில் இருந்த மரத்தில் இருந்த கதண்டு வண்டுகளின் கூடு திடீரென கலைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான கதண்டு வண்டுகள், விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை நோக்கிப் படையெடுத்து சரமாரியாகக் கடிக்கத் தொடங்கின.

திடீரென நடந்த இந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அந்த இடமே போர்க்களம் போலக் காட்சியளித்தது.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை: இந்த வண்டு கடித் தாக்குதலில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 25 பேரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் அபாய கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மகிழ்ச்சியாகத் தொடங்கிய காதணி விழா, கதண்டு வண்டுகள் கடித்ததில் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோகத்துடன் முடிந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version