புதுடெல்லி:

நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் பிகார், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மாணவர்கள் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் போராட்டக்காரர்களைக் கலைக்கக் காவல்துறையினர் வரம்பு மீறிப் பலப்பிரயோகம் செய்ததாகவும், பலரைக் கைது செய்ததாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இவ்வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இது தொடர்பான நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள் மற்றும் விவரங்கள்:

  • சிறுவர்கள் மற்றும் மாணவர்களை விடுவிக்க உத்தரவு:போராட்டங்களின் போது கைது செய்யப்பட்ட அல்லது காவலில் வைக்கப்பட்டுள்ள 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் முன் குற்றப் பின்னணி இல்லாத மாணவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
  • கடுமையான நடவடிக்கை எடுக்கத் தடை:குற்றப் பின்னணி இல்லாத மாணவர்கள் மீது தற்போதைக்கு எந்தவிதக் கடுமையான நடவடிக்கைகளையும் (Coercive Action) எடுக்கக் கூடாது என இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாக்க ஆணை:போராட்டங்களின் போது பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள், ட்ரோன் வீடியோக்கள், காவல்துறையினரின் பாடி கேமரா பதிவுகள் மற்றும் ஒயர்லெஸ் தகவல் தொடர்புத் தரவுகள் உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் ஆதாரங்களையும் அதிகாரிகள் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்றும், அவற்றை இடைக்கால உத்தரவு இன்றி பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
  • சுதந்திரமான விசாரணைக்கு முகாந்திரம்:மாணவர்கள் தரப்பில் துப்பாக்கிச் சூடு, தடியடி மற்றும் ரப்பர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதேவேளையில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இச்சம்பவங்கள் குறித்து ஒரு சுதந்திரமான மற்றும் நடுநிலையான சிறப்பு விசாரணைக்குழு (SIT) மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டிய முகாந்திரம் உள்ளது எனக் குறிப்பிட்டனர்.

இவ்வழக்கு தொடர்பாக டெல்லி, பிகார், மகாராஷ்டிரா, கேரளா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு, வழக்கு அடுத்த கட்ட விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version