துபாயில் மனிதநேய கலாச்சார பேரவை (MKP) சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி மற்றும் ‘சட்டசபையில் சமூக நீதி குரல்’ நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. டேரா துபாய் லேண்ட் மார்க் ஹோட்டலில் நடந்த இந்த நிகழ்ச்சி அரங்கம் நிரம்பியதோடு, வெளியேயும் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

2016 முதல் 2021 வரை சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக வெளிவந்த இந்த நூலை பிளாக் துலிப் குழுமத்தின் தலைவர் M. முகம்மது யஹ்யா வெளியிட்டார். முதல் பிரதியை ஆரிஃபா கல்வி நிறுவனங்களின் தலைவர் எம். சுல்தானுல் ஆரிப் பெற்றுக் கொண்டார்

இரண்டாவது பிரதியை மலேசியாவின் சுபைதா உணவக குழுமத் தலைவர் டத்தோ அப்துல் அஜீஸ், மூன்றாவது பிரதியை TEPA அமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து சிங்கப்பூர் ஹவுஸ் நிறுவன உரிமையாளர் அப்துல் மாலிக், திமுக அயலக அணி அமீரக அமைப்பாளர் S.S. மீரான், வெஸ்டர்ன் ஆட்டோ நிறுவனர் கமால், கீழை ஆபீதீன், புரோ மேக் நிறுவனர் A.R. ரியாஸ் உள்ளிட்டோர் நூலை பெற்றனர்.

நிகழ்ச்சிக்கு முன் பொதுச் செயலாளர் M. முகம்மது நாசர் நூலின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். துபாயை சேர்ந்த அரசுத்துறை அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று இஃப்தார் விருந்தில் கலந்து கொண்டனர். அவர்களின் சார்பில் பேசிய அரபியர் பக்கர் சித்திகி, சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் நிகழ்ச்சிகள் துபாயில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரமுகர்களுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் J.S. ரிபாய் சால்வை அணிவித்து கவுரவித்தார். 600 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதைவிட அதிகமானோர் திரண்டதால் உடனடியாக கூடுதல் இஃப்தார் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தமிழகத்தை சேர்ந்த அயலக மக்கள் பெருமளவில் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி, சமீப காலங்களில் துபாயில் நடைபெற்ற மிகப்பெரிய தமிழர் கலாச்சார நிகழ்ச்சிகளில் ஒன்றாக பாராட்டப்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version