சென்னை:
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சி. ஜோசப் விஜய், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டிருந்த நிலையில், அதில் இதுவரை எத்தனை கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன என்ற விபரத்தை அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் சி. ஜோசப் விஜய் அவர்கள், மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவில் இயங்கி வரும் 717 டாஸ்மாக் மதுக்கடைகளை இரு வாரங்களுக்குள் மூட அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். முதலமைச்சரின் இந்த நல்லெண்ண நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
அதன்படி, பள்ளிகளுக்கு அருகில் 186 கடைகளும், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் 276 கடைகளும், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 255 கடைகளும் என மொத்தம் 717 கடைகள் அடையாளம் காணப்பட்டன.
காலக்கெடு முடிந்தும் நீடிக்கும் கடைகள்:
முதலமைச்சர் விஜய் விதித்த இரு வாரக் காலக்கெடு கடந்த மே 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது. ஆனால், இதுவரை அனைத்துக் கடைகளும் முழுமையாக மூடப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
“கடந்த மே 23-ஆம் தேதி நிலவரப்படி 436 கடைகள் மட்டுமே மூடப்பட்டதாகத் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்திருந்தார். முதலமைச்சர் விதித்த 14 நாட்கள் அவகாசம் முடிந்து 16 நாட்களுக்கு மேலாகியும், இன்னும் பல இடங்களில் இந்த 717 கடைகளின் பட்டியலில் உள்ள மதுக்கடைகள் தொடர்ந்து இயங்கி வருவது ஏமாற்றமளிக்கிறது.”
அதிகாரிகளுக்கு அன்புமணி கண்டனம்:
மதுபான ஆலை அதிபர்கள் மற்றும் ‘மது லாபி’யின் அழுத்தம் காரணமாகவே எஞ்சிய கடைகளை மூடுவதற்கு அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பிறப்பித்த உத்தரவை, அதிகாரிகள் எவ்விதக் காரணமுமின்றி தாமதப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே, அறிவிக்கப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளும் இன்றுள்ள நிலவரப்படி முழுமையாக மூடப்பட்டுவிட்டனவா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும், எஞ்சியுள்ள கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.


