சென்னை: தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மின்கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட ஒப்பந்தமே முக்கியக் காரணம் என்று மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், தற்போது மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசிடம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், மின்சார வாரியத்தின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்துப் பல்வேறு விபரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அப்போது மின்கட்டண உயர்வு குறித்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்ததாவது:
“கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், ஆண்டுதோறும் 6 சதவீதம் வரை மின்கட்டணத்தை உயர்த்தும் வகையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தத் தவறான ஒப்பந்த நடைமுறையின் விளைவாகவே ஆண்டுதோறும் கட்டண உயர்வு ஏற்படும் சூழல் உருவானது. முந்தைய ஆட்சியாளர்களின் தவறான நிர்வாகத்தால் தற்போது மின்சாரத் துறை சுமார் ரூ.2.5 லட்சம் கோடி கடனில் தத்தளித்து வருகிறது.”
மேலும் பேசிய அவர், “கடந்த காலங்களில் சோலார் பேனல் கொள்முதல் செய்த விவகாரத்திலும் மிகப்பெரிய அளவில் விதிமுறை மீறல்களும், முறைகேடுகளும் நடந்துள்ளன. இதில் தவறு செய்தவர்கள் முன்னாள் அமைச்சர்களாக இருந்தாலும் அவர்கள் மீது சட்டம் தன் கடமையைச் செய்யும். தற்போது மின்வாரியத்தில் உள்ள பழைய ஒப்பந்த நடைமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, முற்றிலும் வெளிப்படையான புதிய ஒப்பந்தக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. டெண்டர் எடுப்பதில் இனி எந்தவித மறைமுக டீலிங்கும் நடைபெறாது” என்று எச்சரித்தார்.
தொடர்ந்து பொதுமக்களுக்குப் பதிலளிக்கும் வகையில், “மின்சார வாரியத்தில் கடுமையான பணியாளர்கள் பற்றாக்குறை இருந்தபோதிலும், தற்போதைய முதலமைச்சரின் உத்தரவின் பேரில் மின் விநியோகத்தைச் சீராக வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போது மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசிடம் இல்லை. இது தொடர்பாகப் பரவி வரும் தகவல்கள் அனைத்தும் தவறானவை. பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை” என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் உறுதிபடத் தெரிவித்தார்.


