சென்னை: ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ (NEEK) திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தனுஷின் அக்கா மகனான பவிஷ் நாராயணன் கதாநாயகனாக நடித்துள்ள ‘லவ் ஓ லவ்’ (Love Oh Love) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், நவீன காலக் காதலையும், அதன் பின்னணியில் உள்ள எமோஷனல் மற்றும் கலகலப்பான தருணங்களையும் மையமாகக் கொண்ட ஒரு பக்கா ரொமாண்டிக் எண்டர்டெய்னராகத் தயாராகியுள்ளது. இதில் பவிஷிற்கு ஜோடியாகப் பிரபல தெலுங்கு யூடியூப் நட்சத்திரம் நாக துர்கா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

நட்சத்திரப் பட்டாளம்: சென்னை மற்றும் ஊட்டி சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில், தற்போது படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இளமை துள்ளும் காதல் கதையாக உருவாகியுள்ள இந்த டீசரில், பவிஷ் மற்றும் நாக துர்கா இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.

இப்படத்தில் முன்னணி இயக்குநர்களான செல்வராகவன், கே.எஸ். ரவிகுமார் மற்றும் வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பலமான தொழில்நுட்பக் குழு: இப்படத்திற்குப் தேசிய விருது பெற்ற என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு (Editing) செய்துள்ளார். பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீனிமா மீடியா மற்றும் கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘லவ் ஓ லவ்’ திரைப்படம், கோடை விடுமுறை விருந்தாக விரைவில் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. தனுஷ் ரசிகர்களிடையே இந்த டீசர் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version