சென்னை: வரும் டிசம்பர் 03, 2026 அன்று கொண்டாடப்படவுள்ள “உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை” முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகச் சிறப்பாகப் பணியாற்றிய தனிநபர்கள், ஆசிரியர்கள், சமூகப் பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மாநில விருதுகள் வழங்கப்படவுள்ளன.

விருதுகளின் விவரங்கள் & தகுதிகள்:

  • சிறந்த பணியாளர் / சுயதொழில் புரிபவர்: கை, கால் பாதிக்கப்பட்டோர், பார்வை/செவித்திறன் குறைபாடுள்ளோர், அறிவுசார் குறைபாடுடையோர் மற்றும் பல்வேறு குறைபாடுகள் உள்ள பிரிவினருக்கு 10 விருதுகள்.
  • சிறந்த ஆசிரியர்கள்: பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோருக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஹெலன் கெல்லர் விருது (2 விருதுகள்) மற்றும் அறிவுசார் குறைபாடுடையோருக்குக் கற்பிக்கும் சிறந்த ஆசிரியர் (1 விருது).
  • சிறந்த சமூகப் பணியாளர் & தொண்டு நிறுவனம்: மாற்றுத்திறனாளிகளுக்குச் சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளருக்கு 1 விருதும், சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 1 விருதும் வழங்கப்படும்.
  • பணியமர்த்திய நிறுவனம்: மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனத்திற்கு 1 விருது.
  • ஆரம்ப நிலை பயிற்சி மைய ஆசிரியர்கள்: ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் செவித்திறன் (1 விருது) மற்றும் அறிவுசார் குறைபாடுடையோருக்குக் கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு (1 விருது).
  • சிறந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர்: மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பாகப் பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு 2 விருதுகள்.
  • தடையற்ற கட்டமைப்பு (Barrier-Free Environment): பொதுக் கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 2 விருதுகள்.

மொத்தம் 22 விருதுகள் வழங்கப்படவுள்ள நிலையில், தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய நபர்கள் மற்றும் நிறுவனங்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக 22.10.2026 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது

Share.
Leave A Reply

Exit mobile version