ஓட்ஸ் ஒரு சத்தான முழுதானியம். இதில் பீட்டா க்ளுக்கன் நார்ச்சத்து, புரோட்டீன், மக்னீசியம், இரும்பு மற்றும் பல சத்துக்கள் உள்ளன. உடல் எடையை கட்டுப்படுத்த பலர் தினமும் ஓட்ஸ் கஞ்சி குடித்து வருகின்றனர்.

ஆனால் சர்க்கரை நோயாளிகள் ஓட்ஸ் கஞ்சி குடித்தால் உண்மையில் சுகர் குறையுமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.

நீரிழிவு நிபுணர் டாக்டர் பிரகாஷ் மூர்த்தி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுவதாவது, “ஓட்ஸ் கஞ்சி குடித்தால் சுகர் உடனே கட்டுப்பாட்டில் வரும் என்பது தவறான நம்பிக்கை. குறிப்பாக இன்ஸ்டன்ட் ஓட்ஸ் குடித்தால் இரத்த சர்க்கரை வேகமாக உயரலாம்” என எச்சரிக்கிறார்.

இன்ஸ்டன்ட் ஓட்ஸ் vs ஸ்டீல் கட் ஓட்ஸ்

ஓட்ஸ் வேக வைக்கப்பட்டு நசுக்கப்பட்டால் அது இன்ஸ்டன்ட் ஓட்ஸாகும். இந்த முறையில் நார்ச்சத்து குறைந்து, கிளைசீமிக் லோடு அதிகரிக்கிறது.

50 கிராம் இன்ஸ்டன்ட் ஓட்ஸின் கிளைசீமிக் லோடு 25–30 வரை இருக்கும். இது இரத்த சர்க்கரையை வேகமாக உயர்த்தக்கூடும்.

ஆனால் ஸ்டீல் கட் ஓட்ஸில் கிளைசீமிக் லோடு குறைவாக இருக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்த வேண்டுமானால் ஸ்டீல் கட் ஓட்ஸைத் தேர்வு செய்யலாம் என்று மருத்துவர் கூறுகிறார்.

ஓட்ஸ் உண்மையில் யாருக்கு நல்லது?

ஓட்ஸில் உள்ள பீட்டா க்ளுக்கன் நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதனால் இதய நோய் அபாயம் குறையும்.

எனவே ஓட்ஸ் சர்க்கரை நோயாளிகளை விட கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு அதிகம் பயனளிக்கக்கூடும்.

100 கிராம் ஓட்ஸில் சுமார் 10 கிராம் புரோட்டீன் மட்டுமே உள்ளது. இதே அளவு புரோட்டீன் ஒரு முட்டையிலேயே கிடைக்கும்.

அதனால் ஓட்ஸ் சாப்பிடுவது தவறு இல்லை. ஆனால் அது சுகரை நேரடியாக குறைக்கும் மருந்து அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

முக்கிய குறிப்பு

இந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு உங்கள் மருத்துவரை அணுகுவது அவசியம்.

Share.
Leave A Reply

Exit mobile version