ஒஸ்லோ/புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நார்வே நாட்டு அரசுமுறைப் பயணத்தின் போது, அந்நாட்டின் முன்னணி நாளிதழான ‘ஆஃப்டன்போஸ்டன்’ (Aftenposten) அவரை ‘பாம்பாட்டி’ போல் சித்தரித்து கேலிச்சித்திரம் (Cartoon) ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தற்பொழுது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையையும், சமூக வலைத்தளங்களில் இந்தியர்களின் கடும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.
பத்திரிகைக் கட்டுரையில் என்ன எழுதப்பட்டுள்ளது?
நார்வே பத்திரிகையாளர் ஃபிராங்க் ரோசாவிக் (Frank Rossavik) எழுதியுள்ள அந்த ஓபினியன் (கருத்துக்கணிப்பு) கட்டுரையின் தலைப்பு, “ஒரு தந்திரமான மற்றும் சற்றே எரிச்சலூட்டும் மனிதன்” (A clever and slightly annoying man) என்பதாகும்.
கார்ட்டூன் சித்தரிப்பு: அந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கேலிச்சித்திரத்தில், பிரதமர் மோதி தரையில் சம்மணமிட்டு அமர்ந்து மகுடி வாசிப்பது போலவும், அவருக்கு முன்னால் இருக்கும் கூடையிலிருந்து பாம்புக்குப் பதிலாக எரிபொருள் நிலையக் குழாய் (Fuel-station pump hose) வெளியே வருவது போலவும் வரையப்பட்டுள்ளது.
கட்டுரையின் முக்கிய அம்சங்கள்:
- இந்தியா ஃபர்ஸ்ட் கொள்கை: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் “அமெரிக்கா ஃபர்ஸ்ட்” என்று கூறுவது போல, மோதி “இந்தியா ஃபர்ஸ்ட்” என்ற கொள்கையைக் கொண்டுள்ளார். ஆனால், அவர் அதை ராணுவ மிரட்டல்கள் மூலம் செய்யாமல்; உலக நாடுகளுடன் புன்னகைத்து, பேசி, வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் மூலம் சாதிக்கிறார்.
- நார்டிக் நாடுகளின் மீது பார்வை: உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று மோதி நினைப்பதாகக் குறிப்பிட்டுள்ள இந்தக் கட்டுரை, நார்வே போன்ற சிறிய நாடுகளின் காற்று ஆற்றல், பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் ஆர்க்டிக் பிராந்தியத்தின் மீதான இந்தியாவின் ஆர்வத்தை விவரிக்கிறது.
சர்ச்சை வெடிக்கக் காரணம் என்ன?
‘இனவெறி’ மற்றும் ‘காலனித்துவ மனநிலை’ என்ற குற்றச்சாட்டு: மேற்கத்திய நாடுகள் இன்னும் பழைய காலனித்துவ மனநிலையிலிருந்து (Colonial Mindset) வெளியே வரவில்லை என்றும், நவீன தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் இந்தியாவை இன்னும் ‘பாம்பாட்டிகளின் தேசம்’ என்ற பிற்போக்குத்தனமான கண்ணோட்டத்திலேயே பார்ப்பதையே இந்த கார்ட்டூன் காட்டுவதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது அப்பட்டமான “இனவெறி” (Racism) எனப் பலரும் எக்ஸ் (X) தளத்தில் சாடி வருகின்றனர்.
பின்னணிச் சர்ச்சை: பிரதமர் மோதி நார்வே பிரதமருடன் இணைந்து நடத்திய கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, நார்வே பெண் பத்திரிகையாளர் ஹெல்லே லிங் என்பவர், “ஊடக சுதந்திரம்” குறித்து சத்தமாகக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளிக்காமல் பிரதமர் மோதி கடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது. இந்தச் சர்ச்சை நீடித்து வரும் சூழலில், இந்த கார்ட்டூன் வெளியானது எரியும் நெருப்பில் நெய் ஊற்றுவது போல் ஆகியுள்ளது.
பிரதமரின் பழைய பேச்சுடன் ஒப்பீடு: கடந்த 2014-ஆம் ஆண்டு அமெரிக்காவில் பேசிய பிரதமர் மோதி, “முன்பெல்லாம் நம் நாடு பாம்பாட்டிகளின் தேசம் என்று உலகம் நினைத்தது. ஆனால் இன்று நமது இளைஞர்கள் கணினி மவுஸ் (Computer Mouse) மூலம் உலகையே ஆட்டிப்படைக்கிறார்கள்” என்று பேசியிருந்தார். தற்பொழுது நார்வே பத்திரிகை அவரை மீண்டும் பழைய பாணியில் சித்தரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


