தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு முதன்முறையாக டிஜிட்டல் முறையில் நடைபெற உள்ளது. இதற்காக பொதுமக்கள் தங்களது குடும்ப விவரங்களை ஆன்லைன் மூலம் சுயமாகப் பதிவு செய்யும் (Self-Enumeration) வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

பதிவு செய்யும் கால அவகாசம்: தமிழகத்தில் இந்த சுய கணக்கெடுப்புப் பணி ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை (15 நாட்கள்) நடைபெறுகிறது.

ஆன்லைனில் பதிவு செய்யும் வழிமுறைகள்:

  1. இணையதளத்திற்குச் செல்லவும்: அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான https://se.census.gov.in/ என்பதற்குச் செல்லவும்.
  2. மாநிலம் மற்றும் விவரங்கள்: திரையில் உள்ள ‘State’ என்ற பகுதியில் ‘Tamil Nadu’ என்பதைத் தேர்வு செய்யவும். பின்பு திரையில் உள்ள கேப்சா (Captcha) குறியீட்டை உள்ளிடவும்.
  3. மொபைல் எண் பதிவு: குடும்பத் தலைவரின் பெயர் மற்றும் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவும் (மின்னஞ்சல் முகவரி இருந்தால் அதையும் அளிக்கலாம்).
  4. மொழி தேர்வு: 16 மொழிகளில், உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட்டுச் சரிபார்க்கவும்.
  5. இடம் குறித்தல் (Location Marking): உங்கள் மாவட்டம், நகரம் அல்லது கிராமம் மற்றும் அருகில் உள்ள முக்கிய அடையாளத்தை (Landmark) உள்ளிட்ட பிறகு, மேப்பில் உங்கள் வீட்டின் இருப்பிடத்தைக் கண்டறிந்து ‘Save’ செய்யவும்.
  6. கேள்விகள்: அடுத்து வரும் திரையில், வீடு மற்றும் வீட்டு வசதிகள் குறித்த சுமார் 33 கேள்விகள் கேட்கப்படும். அவற்றுக்குப் பதிலளிக்கவும்.
  7. சமர்ப்பித்தல் (Submission): அனைத்து விவரங்களையும் சரிபார்த்து ‘Final Submit’ செய்யவும்.
  8. அடையாள எண் (SE ID): படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, உங்களுக்கு 11 இலக்கங்களைக் கொண்ட ஒரு தனித்துவமான ‘Self-Enumeration ID’ (SE ID) உருவாக்கப்படும். இது உங்கள் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவும் (SMS) வரும்.

முக்கிய குறிப்புகள்:

  • அடையாள எண் அவசியம்: உங்கள் பகுதிக்குக் கணக்கெடுப்புப் பணியாளர்கள் நேரில் வரும்போது, அவர்களிடம் இந்த 11 இலக்க அடையாள எண்ணைக் காண்பிக்க வேண்டும். அவர்கள் அந்த எண்ணைச் சரிபார்த்து உங்கள் தரவுகளை உறுதி செய்வார்கள்.
  • ஒரு குடும்பத்திற்கு ஒரு எண்: ஒரு குடும்பத்திற்கு ஒரே ஒரு மொபைல் எண் மூலம் மட்டுமே பதிவு செய்ய முடியும்.
  • மாற்றங்கள்: சமர்ப்பித்த பிறகு இணையத்தில் திருத்தங்கள் செய்ய முடியாது. விவரங்கள் ஏதேனும் மாறினால், கணக்கெடுப்பாளர் நேரில் வரும்போது அவர்களிடம் தெரிவிக்கலாம்.

இந்த டிஜிட்டல் முயற்சி மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியை வேகமாகவும், துல்லியமாகவும் மேற்கொள்ள உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version