புதுடெல்லி:
நீட் நுழைவுத் தேர்வில் தொடர்ந்து வெளியாகும் முறைகேடு புகார்கள் குறித்து டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“ஏழைக் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி”
நீட் மறுதேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் குறித்து தனது எக்ஸ் (X) பக்கத்தில் கவலை தெரிவித்துள்ள கெஜ்ரிவால், நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் தங்களின் மருத்துவர் கனவிற்காக இரவு பகலாகப் படித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“தொடர்ந்து இதுபோன்று வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்கள் எழுவது, நேர்மையாகப் படிக்கும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து மாணவர்களின் நம்பிக்கையை முற்றிலும் சிதைத்துவிடும். ஏழைக் குழந்தைகள் நீதிக்கு எங்கே போவார்கள்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசுக்கு கோரிக்கை
மத்திய அரசும், தேர்வு நடத்தும் அமைப்புகளும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும், முறைகேடுகளுக்குக் காரணமானவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


