புதுடெல்லி: இந்தியாவின் வேலைவாய்ப்புச் சந்தையில் செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) தொழில்நுட்பம் அசுர வேகத்தில் ஊடுருவி வருவதாகப் புதிய ஆய்வு ஒன்று பிரெஷர்களுக்கு (Freshers) பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போதுள்ள நிறுவனங்களின் ஆரம்பகட்ட (Entry-level) வேலைகளில் சுமார் 37 சதவீதப் பணிகளை மனிதர்களுக்குப் பதிலாக ஏஐ கருவிகளே செய்து முடிப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரபல உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசென்ட் (Cognizant) மற்றும் கல்வி நிறுவனமான பியர்சன் (Pearson) ஆகியவை இணைந்து நடத்திய “தி ஏஐ வொர்க்ஃபோர்ஸ் பல்ஸ்” (The AI Workforce Pulse) என்ற ஆய்வில் இந்தத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக சராசரியை விட இந்தியாவில் அதிகம்!

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களின் 750 மனிதவள மேம்பாட்டு (HR) தலைவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதன் முக்கியக் கண்டுபிடிப்புகள் இதோ:

  • இந்தியாவின் ஆதிக்கம்: உலகளவில் ஆரம்பகட்ட வேலைகளில் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு சராசரியாக 33 சதவீதமாக உள்ள நிலையில், இந்தியாவில் அது 37 சதவீதமாக உயர்ந்து உலக நாடுகளை விட முன்னிலையில் உள்ளது.
  • பாதி வேலை காலி: ஆய்வில் பங்கேற்ற 18 சதவீத எச்.ஆர் மேலாளர்கள், தங்களது நிறுவனங்களில் பிரெஷர்களுக்கு வழங்கப்படும் வேலைகளில் பாதியோ அல்லது அதற்கு மேற்பட்டவையோ ஏற்கனவே ஏஐ மூலம் செய்யப்படுவதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
  • பணி மாற்றம்: 96 சதவீத நிறுவன அதிகாரிகள், இன்னும் 5 ஆண்டுகளில் பிரெஷர்களின் வேலை என்பது வெறும் பணிகளைச் செய்வதாக இருக்காது; மாறாக, ஏஐ செய்யும் பணிகளைக் கண்காணிக்கும் மேலாண்மைப் பணியாக (Supervisory Roles) மாறும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

என்னென்ன வேலைகள் பாதிப்பு?

தரவு உள்ளீடு (Data Entry), அட்டவணை மேலாண்மை (Scheduling), ஆவணப் பராமரிப்பு (Document Management) மற்றும் வாடிக்கையாளர் சேவை (Basic Customer Service) போன்ற வழக்கமான மற்றும் மீண்டும் மீண்டும் செய்யப்பட வேண்டிய ஆரம்பகட்ட பணிகள் தான் தற்போது ஏஐ வசம் சென்றுள்ளன.

இருப்பினும், 80 சதவீத இந்திய நிறுவனங்கள், இந்த மாற்றத்தால் ஊழியர்கள் தங்களின் நேரத்தைச் சுயசிந்தனை சார்ந்த மற்றும் நிறுவன வளர்ச்சிக்குத் தேவையான உயர்மட்டப் பணிகளில் (Higher-value strategic work) முதலீடு செய்ய முடிவதாகக் கூறியுள்ளனர்.

ஐடி அல்லாத துறைகளுக்கும் ஏஐ கட்டாயம்!

இந்த ஆய்வின்படி, இனி வரும் காலங்களில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் போன்ற தொழில்நுட்பத் துறைக்கு மட்டுமல்லாது, மார்க்கெட்டிங், மனிதவள மேம்பாடு (HR), நிதித்துறை, விற்பனை போன்ற ஐடி அல்லாத இதரப் பிரிவுகளிலும் (Non-technical roles) 98 சதவீத நிறுவனங்கள் ஏஐ திறனை (AI Literacy) எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளன.

அதே நேரத்தில், 91 சதவீத ஊழியர்கள் ஏஐ பயிற்சிகளைக் கோரினாலும், இந்தியாவின் 63 சதவீத கார்ப்பரேட் பயிற்சித் திட்டங்கள் (L&D Programmes) இந்தத் தொழில்நுட்ப வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வருவதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஏஐ தொழில்நுட்பம் புதிய வகை வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்பதால், பிரெஷர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக் கொள்வது (Upskilling) மட்டுமே இதற்கான தீர்வு என்று காக்னிசென்ட் இந்தியாவின் தலைவர் ராஜேஷ் வாரியர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version