புதுடெல்லி:

தமிழக பாஜாக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், இன்று (மே 22) இரவு அல்லது நாளை காலை அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மாநிலத்தில் புதிய அரசியல் சூழல் நிலவி வரும் வேளையில், பாஜாக மாநிலத் தலைவரின் இந்த டெல்லிப் பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக நிதின் நபினுடன் சந்திப்பு:

மத்திய அமைச்சர் அமித்ஷாவைச் சந்திப்பதற்கு முன்பாக, இன்று புதுடெல்லியில் பாஜக தேசியத் தலைவர்களில் ஒருவரான நிதின் நபினை நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது தமிழக பாஜாக-வின் தற்போதைய செயல்பாடுகள், தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய கட்சியின் கள நிலவரம் மற்றும் அடுத்தகட்டக் கட்டமைப்பு மாற்றங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அமித்ஷா சந்திப்பின் முக்கியத்துவம்:

இதைத் தொடர்ந்து, இன்று இரவு அல்லது நாளை காலை அமித்ஷாவைச் சந்திக்கும் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜாக-வின் தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்த முக்கிய அறிக்கை ஒன்றை அவரிடம் சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், பாஜாக எதிர்கட்சியாகக் களத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் மற்றும் வரவிருக்கும் நாடாளுமன்ற மாநிலங்களவை (Rajya Sabha) தேர்தல் வியூகங்கள் குறித்தும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தடுத்து டெல்லி மேலிடத் தலைவர்களைத் தமிழக பாஜாக தலைவர் சந்தித்து வருவது, தமிழக அரசியல் களத்தில் அடுத்தகட்ட நகர்வுகளுக்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version