ஹைதராபாத்: கோயம்புத்தூரில் சர்வதேச தரத்திலான தொழில் வளர் காப்பகம் (Incubation Centre) அமைப்பது தொடர்பாக, தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறை அமைச்சர் திரு. பெ. மதன்ராஜா அவர்கள் தெலங்கானா மாநில அரசு அதிகாரிகளுடனும் அமைச்சருடனும் நேரில் கலந்துரையாடினார்.

ஹைதராபாத்தில் இயங்கி வரும் உலகப் புகழ்பெற்ற ‘டி ஹப்’ (T-Hub) மற்றும் ‘டி வொர்க்ஸ்’ (T-Works) மையங்களைப் பார்வையிட்ட அமைச்சர், கோவை திட்டத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.
முக்கிய அம்சங்கள்:
- மையங்கள் பார்வை: ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் ‘T-Hub’ மற்றும் அதிநவீன மென்பொருள்/வன்பொருள் வடிவமைப்பு மையமான ‘T-Works’ ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.
- அமைச்சர்கள் சந்திப்பு: தெலங்கானா மாநில தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், தொழில் வணிகம் மற்றும் சட்டமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. டி. ஸ்ரீதர் பாபு அவர்களுடன் கோவை மையத் திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
- கோவை திட்டம்: கோயம்புத்தூர் மண்டலத்தின் தொழில்முனைவோர், புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் தொழில் நுட்ப கண்டுபிடிப்பாளர்களை சர்வதேச அளவிற்கு உயர்த்தும் வகையில் இந்த காப்பக மையம் வடிவமைக்கப்படவுள்ளது.