சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய தமிழக அரசியல் களம் குறித்து, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்கள் சந்திப்பில் முன்வைத்துள்ள பகீர் குற்றச்சாட்டு ஒட்டுமொத்த தமிழக அரசியலிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழகத்தில் திரைக்குப் பின்னால் நடந்த பல அதிரடி ரகசிய அரசியல் நகர்வுகளை அவர் இந்த சந்திப்பில் ஓப்பனாக உடைத்துள்ளார்.

பதவிக்காக திமுகவுடன் ரகசியப் பேச்சுவார்த்தை? செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் அமர்வதற்காகத் திமுகவுடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்” என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், “தங்கள் வாழ்நாள் முழுவதும் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா அம்மாவும் எந்தத் தீய சக்தியைத் தீவிரமாக எதிர்த்தார்களோ, அதே திமுகவுடன் வெறும் பதவி ஆசைக்காக இபிஎஸ் கூட்டுச் சேர முயன்றார். இது ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களுக்கும் இழைக்கப்பட்ட பச்சைத் துரோகம்” என்று காரசாரமாகச் சாடினார்.

கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பால் முறிந்த திட்டம்: இந்த ரகசியச் சூழ்ச்சியின் பின்னணியைப் பிரித்து மேய்ந்த அமைச்சர், “இபிஎஸ்ஸும் மு.க.ஸ்டாலினும் இணைந்து கூட்டு ஆட்சி அமைக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், இந்தத் திட்டத்தை திமுக கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. அவர்களின் பலத்த எதிர்ப்புக் காரணமாகவே இந்த ரகசியக் கூட்டணி முயற்சி டோட்டலாகத் தோல்வியில் முடிந்தது. அதன் பிறகே, ‘நாங்கள் மக்களுக்காக எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று மு.க.ஸ்டாலின் நாடகமாடி அறிக்கை விட்டார்” என்று வெளுத்து வாங்கினார்.

தவெக-தான் ‘புதிய அதிமுக’: தலைமை மீது ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழந்த உண்மையான அதிமுக தொண்டர்களும், முன்னாள் அமைச்சர்களும் இப்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தைத்தான் (தவெக) தங்களின் ‘புதிய அதிமுக-வாக’ப் பார்க்கிறார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டார். அதனால்தான், எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி மக்கள் சேவை செய்வதற்காக அதிமுகவினர் தவெக-வில் மாஸாக இணைந்து வருகிறார்கள் என்றும் அவர் முழங்கினார்.

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்து வரும் பரபரப்பான சூழலில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் இந்த அதிரடிப் பேட்டி அடங்கிய வீடியோ தற்போது எக்ஸ் (X) தளத்தில் தீயாய்ப் பரவி, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version