சென்னை: சென்னையில் சிஎன்ஜி (CNG) எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், ஆட்டோ மற்றும் வணிக வாகன ஓட்டிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் நிலவி வரும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை ஏற்ற இறக்கங்கள், மற்றும் அண்மைக்காலமாக மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் பதற்றமான சூழல் காரணமாக, இந்தியாவிலும் எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தற்போதும் சிஎன்ஜி விலை உயர்த்தப்பட்டுள்ளது.

விலை நிலவரம்: சென்னையில் இதுவரை ஒரு கிலோ சிஎன்ஜி எரிவாயு ரூ.91.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அதன் விலையில் அதிரடியாக ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்விற்குப் பின், சென்னையில் இன்று முதல் ஒரு கிலோ சிஎன்ஜி எரிவாயு ரூ.93.50 என்ற புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனையாகிறது.

வாகன ஓட்டிகள் கோரிக்கை: பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு மாற்றாக, செலவைக் குறைக்கும் நோக்கில் பலரும் தங்களது வாகனங்களைச் சிஎன்ஜி முறைக்கு மாற்றி வந்தனர். ஆனால், அண்மைக்காலமாக சிஎன்ஜி விலையும் அடுத்தடுத்து உயர்ந்து வருவது நடுத்தர மற்றும் எளிய பொதுமக்களைப் பெரிதும் பாதித்துள்ளது.

இந்த திடீர் விலை உயர்வு குறித்து சென்னை ஆட்டோ ஓட்டிகள் கூறுகையில், “எரிபொருள் விலை உயர்வால் எங்களின் அன்றாட வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. எனவே, அரசு உடனடியாகக் தலையிட்டு ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைத்து, நிலையான ஒரு கட்டண முறையைக் கொண்டு வர வேண்டும்” எனத் தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version