சென்னை: நமது ஊர் தெருக்களில் மாலை நேரம் ஆகிவிட்டாலே வீசும் பரோட்டா வீச்சு சத்தமும், சால்னாவின் வாசனை கலந்த பரோட்டாவின் சுவையும் பலரையும் சுண்டி இழுத்துவிடும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் ஃபேவரைட் உணவாக இருக்கும் இந்த பரோட்டா, பார்ப்பதற்கு வேண்டுமானால் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கலாம். ஆனால், அதன் பின்னணியில் உடலுக்குக் கேடு விளைவிக்கும் பல பேராபத்துகள் ஒளிந்திருக்கின்றன என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

அப்படியென்ன பரோட்டாவில் ஆபத்து இருக்கிறது? இதோ முழு விவரம்:

1. மைதாவும் அதன் ரசாயனங்களும்

பரோட்டா தயாரிக்கப் பயன்படும் மைதா மாவு, கோதுமையிலிருந்து தவிடு நீக்கப்பட்டு, அலோக்ஸான் (Alloxan) மற்றும் பென்சாயில் பெராக்சைடு (Benzoyl Peroxide) போன்ற ரசாயனங்கள் மூலம் வெண்மையாக்கப்படுகிறது. இதில் உள்ள அலோக்ஸான் என்ற ரசாயனம், நமது கணையத்தில் (Pancreas) உள்ள பீட்டா செல்களைப் பாதித்து, இன்சுலின் சுரப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது. இதனால் சர்க்கரை நோய் (Diabetes) மிக எளிதாக உங்களைத் தாக்கக்கூடும்.

2. செரிமானப் கோளாறுகள்

மைதா மாவில் நார்சத்து (Fiber) முற்றிலும் கிடையாது. நார்சத்து இல்லாத உணவுகளை நாம் தொடர்ந்து சாப்பிடும் போது, அது குடலில் பசை போல ஒட்டிக்கொண்டு செரிமானப் பாதையை அடைக்கும். இது கடுமையான மலச்சிக்கல் (Constipation) மற்றும் குடல் புண் (Ulcer) போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

3. மாரடைப்பு அபாயம் (Heart Attack)

பரோட்டாவை மிருதுவாக மாற்றுவதற்கும், அதைத் சுட்டு எடுப்பதற்கும் அதிக அளவில் டால்டா (Vanaspati), எண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆபத்தான ‘டிரான்ஸ் ஃபேட்’ (Trans Fat) மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) அதிகமாக உள்ளன. இவை இரத்தக் குழாய்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை (BP) அதிகரித்து, இறுதியில் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை பல மடங்கு கூட்டுகின்றன.

4. உடல் பருமன்

மைதா உணவுகள் உடலின் வளர்சிதை மாற்றத்தைக் (Metabolism) குறைத்து, தேவையற்ற கொழுப்பை உடலில் சேர்க்கின்றன. வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் பரோட்டா சாப்பிடுபவர்களுக்கு மிக விரைவிலேயே உடல் பருமன் (Obesity) மற்றும் தொப்பை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

மருத்துவர்களின் முக்கிய அறிவுரை: “உணவுப் பிரியர்கள் பரோட்டாவை முற்றிலும் தவிர்க்க முடியாவிட்டால், எப்போதாவது ஒருமுறை (மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை) மட்டும் ஆசைக்காகச் சாப்பிடலாம். ஆனால், அதை தினசரி உணவாகவோ அல்லது வாராந்திர வழக்கமாகவோ மாற்றிக் கொள்வது உங்கள் ஆயுளைக் குறைக்கும் செயலாகும். பரோட்டாவிற்குப் பதிலாக கோதுமை சப்பாத்தி அல்லது புல்கா போன்ற ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுப்பதே நல்லது.”

சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆரோக்கியத்தை இழந்துவிடாதீர்கள். பரோட்டா சாப்பிடும் அளவைக் குறைத்து நலம் காப்போம்!

Share.
Leave A Reply

Exit mobile version