நியூயார்க்: உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றில் செனகல் அணிக்கு எதிரான ஆட்டத்தில், பிரான்ஸ் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் பிரான்ஸ் நாட்டிற்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.
மெட்லைஃப் மைதானத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் செனகலை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியின் 66-வது நிமிடத்தில் மைக்கேல் ஒலிசேவின் பாஸைப் பயன்படுத்தி எம்பாப்பே தனது முதல் கோலை அடித்தார். இதன் மூலம் பிரான்ஸின் முன்னாள் வீரர் ஒலிவியர் ஜிரூடின் (57 கோல்கள்) சாதனையை அவர் சமன் செய்தார். அதைத்தொடர்ந்து ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90+6 நிமிடத்தில்), 30 யார்டு தூரத்திலிருந்து எம்பாப்பே அடித்த மின்னல் வேக கோல், அவரை 58 கோல்களுடன் பிரான்ஸ் வரலாற்றின் தனிப்பெரும் சாதனையாளராக மாற்றியது.
பிரான்ஸ் அணியின் டாப் 3 கோல் வேட்டைக்காரர்கள்:
- கிலியன் எம்பாப்பே – 58 கோல்கள்
- ஒலிவியர் ஜிரூடு – 57 கோல்கள்
- திஹென்றி ஹென்றி – 51 கோல்கள்
வெறும் 27 வயதே ஆன எம்பாப்பே, ஜிரூடை விட 38 போட்டிகள் குறைவாக விளையாடி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உலகக் கோப்பை அரங்கில் தனது 14-வது கோலை பதிவு செய்ததன் மூலம், உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த பிரெஞ்சு வீரர் என்ற ஜஸ்ட் ஃபான்டைனின் (13 கோல்கள்) சாதனையையும், லியோனல் மெஸ்ஸியின் (13 கோல்கள்) உலகக் கோப்பை சாதனையும் எம்பாப்பே முறியடித்துள்ளார்.


