திருவனந்தபுரம்: கேரளாவில் 2026 பிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை உள்ளூர் கிளப்புகள் மற்றும் குடியிருப்பு சங்கங்கள் எவ்வித கட்டணமும் இன்றி பொது இடங்களில் இலவசமாகத் திரையிட கேரளா விளையாட்டுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி கால்பந்து மையங்களில் ஒன்றாகத் திகழும் கேரளாவில், உலகக் கோப்பை போட்டிகளின் போது கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள முக்கிய சந்திப்புகளில் பிரம்மாண்ட திரைகள் அமைத்துக் கொண்டாடுவது நீண்டகால பாரம்பரியமாகும். ஆனால், இந்த ஆண்டு இந்தியாவில் உலகக் கோப்பை போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றுள்ள ‘ஜீ என்டர்டெயின்மென்ட்’ (Zee Entertainment) மற்றும் கேரளாவின் திரையிடல் உரிமத்தைப் பெற்றுள்ள ‘ஈகிள்ஸ் எஃப்சி கேரளா’ (Eagles FC Kerala) நிறுவனம் ஆகியவை, பொது இடங்களில் போட்டிகளைத் திரையிட சுமார் ரூ.25,000 வரை உரிமக் கட்டணம் (Licence Fee) செலுத்த வேண்டும் என அறிவித்திருந்தன. இது உள்ளூர் கிளப்புகள் மற்றும் சாதாரண ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சட்டசபையில் எதிரொலித்த விவாதம்: இந்த விவகாரம் குறித்து கேரளா சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ பி.ஏ. முகமது ரியாஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். கிராமப்புறங்களில் உள்ள சிறிய கிளப்புகள் மற்றும் ரசிகர் மன்றங்கள் மீது இத்தகைய கட்டணங்களை விதிப்பது பெருநிறுவனங்களின் சுரண்டல் நடவடிக்கை என்றும், இதற்கு அரசு தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் ஓ.ஜே. ஜன்னீஷ் மற்றும் முதலமைச்சர் வி.டி. சதீசன் ஆகியோர், “கேரளாவின் கால்பந்து பாரம்பரியத்தையும் ரசிகர்களின் உணர்வுகளையும் அரசு மதிக்கிறது. வணிகரீதியான திரையிடல்களையும் (Malls & Commercial establishments), உள்ளூர் அமைப்புகளின் இலவசக் கூட்டாண்மைத் திரையிடல்களையும் அரசு ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை” என்று தெரிவித்தனர்.

இலவசத் திரையிடல் – அரசு அதிரடி நடவடிக்கை: இதனைத் தொடர்ந்து, விளையாட்டுத் துறைச் செயலாளர் என். பிரசாந்த், ஈகிள்ஸ் எஃப்சி கேரளா தலைவர் ஷஃபி மேத்தர் மற்றும் பிஃபா பிரதிநிதிகளுடன் கேரளா அரசு நடத்திய அவசரப் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, பொதுமக்கள் அல்லது ரசிகர் மன்றங்கள் லாப நோக்கமின்றி, நுழைவுக் கட்டணம் ஏதுமில்லாமல் நடத்தும் பொதுத் திரையிடல்களுக்கு (Non-commercial public screenings) முழுமையான கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. போட்டிகளைத் திரையிட விரும்பும் அமைப்புகள் EaglesFCKerala.com என்ற இணையதளத்தில் எவ்வித கட்டணமும் இன்றி தங்களது விவரங்களை இலவசமாகப் பதிவு செய்து, உடனடியாகத் தன்னிச்சையான (Automatic) அனுமதியைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி முடிவால் கேரளாவில் உள்ள லட்சக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version