சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், இயக்குனர், பாடகர் என பன்முகத்திறமைகளுடன் வலம் வரும் தனுஷ், தற்போது தனது மூத்த மகன் யாத்ராவை கதாநாயகனாக அறிமுகப்படுத்த உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வாரிசு நடிகர்களின் வருகை கோலிவுட்டில் புதிய விஷயம் அல்ல என்றாலும், இந்த அறிமுகம் ஒட்டுமொத்த திரையுலகினரிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் மட்டுமன்றி, படங்களை இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே அவர் இயக்கிய ‘பா.பாண்டி’, ‘ராயன்’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும் சில திரைப்படங்களையும் அவர் இயக்கி வருகிறார். இந்நிலையில், தனது மகன் யாத்ராவின் அறிமுகப் படத்தையும் தனுஷே இயக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை தனுஷ் ஏற்கனவே தயார் செய்துவிட்டதாகவும், இதனை அவரே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வொண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 19 வயதாகும் யாத்ரா, கடந்த சில மாதங்களாகவே நடிப்பு மற்றும் நடனப் பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. தனுஷின் ‘ராயன்’ மற்றும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு தளங்களுக்கு யாத்ரா நேரில் சென்று, சினிமாவின் நுணுக்கங்களைக் கற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேரனான யாத்ரா சினிமாவில் நுழைவதற்கு, அவரது குடும்பத்தினரும் முழு சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் திரைப்படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் மற்றும் நடிகர், நடிகையர் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் சென்னை அல்லது திருப்பதியில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ பூஜை நடத்தப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்பாவைப் போலவே மகனும் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்ட் வருவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தனுஷின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.


