சென்னை: தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் முன்னணி இயக்குநர்-நடிகர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம், வரும் ஜூலை 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘நடிகையர் திலகம்’ படத்திற்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி எதிர்பார்ப்பு உண்டு. அந்த வகையில், அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில், முற்றிலும் நீதிமன்றப் பின்னணியைக் கொண்ட ‘கோர்ட் ரூம் டிராமா’ (Courtroom Drama) பாணியில் இத்திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் வழக்காடும் ஒரு துடிப்பான வழக்கறிஞராக நடித்துள்ளார். அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாடும் எதிர் தரப்பு வழக்கறிஞராக இயக்குநர் மிஷ்கின் நடித்துள்ளார். இவர்களின் இருவருக்கும் இடையிலான நீதிமன்ற வாதாட்டக் காட்சிகள் அனல் பறக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் புதிய போஸ்டருடன் அறிவிப்பைப் பகிர்ந்துள்ளார்.

படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்:

“மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் வரும் ஜூலை 24 முதல் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ட்ரம்ஸ்டிக் புரடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். கோர்ட் ரூம் பின்னணியில் அசாத்தியமான திருப்பங்களுடன் இந்தத் திரைக்கதை அமையவுள்ளது.”

இப்படத்தில் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன், மாலா பார்வதி, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாத இறுதியில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ரிலீஸ் தேதி அறிவிப்பு கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version