சென்னை:

சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘கருப்பு’ திரைப்படத்தில், இசைஞானி இளையராஜா குறித்து வைக்கப்பட்டிருந்த சில காட்சிகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், அக்காட்சிகளைப் படக்குழுவினர் தற்போது முழுமையாக நீக்கியுள்ளனர். அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாகப் படக்குழுவினர் தங்களது வருத்தத்தையும் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளனர்.

இசை அரசனை காயப்படுத்தும் எண்ணமில்லை

இது தொடர்பாக ‘கருப்பு’ படக்குழுவினர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“50 வருடங்களுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை, காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ படக்குழுவிற்கு சிறிதளவும் இல்லை. உள்நோக்கம் ஏதுமின்றி வைக்கப்பட்ட காட்சியினால், தாங்களோ, தங்களைச் சார்ந்தவர்களோ, இசை ஞானியின் ரசிகர்களோ, பிறரோ, மனம் புண்பட்டிருந்தால் தாழ்மையான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”

சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்

திரைப்படத்தில் இடம்பெற்ற குறிப்பிட்ட சில காட்சிகள், அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாகத் தமிழ் நெஞ்சங்களை உருக வைத்த இசை மாமேதை இளையராஜாவைத் தவறாகச் சித்தரிப்பது போல் இருப்பதாக அவரது ரசிகர்கள் மற்றும் திரை உலகினர் மத்தியில் அதிருப்தி எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள படக்குழுவினர், உடனடியாக அக்காட்சிகளைப் படத்திலிருந்து நீக்கியுள்ளனர். படக்குழுவினரின் இந்த துரிதமான நடவடிக்கை மற்றும் முதிர்ச்சியான வருத்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version