சென்னை: ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா மற்றும் த்ரிஷா கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், முதல் நாளிலேயே உலகளவில் பாக்ஸ் ஆபீஸில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. சில இறுதிநேர நிதிச் சிக்கல்கள் மற்றும் காட்சிகள் தாமதம் போன்ற தடைகளைக் கடந்து வெளியான போதிலும், இப்படம் முதல் நாளில் மட்டும் உலகளவில் மொத்தம் ரூ.20.66 கோடி வசூல் செய்துள்ளதாகத் திரைத்துறை வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளன.

இந்திய அளவில் மட்டும் இப்படம் சுமார் 4,891 திரையரங்குகளில் திரையிடப்பட்டு, ரூ.16.66 கோடி மொத்த வசூலை (Gross) ஈட்டியுள்ளது. இதில் குறிப்பாகத் தமிழ்நாட்டின் பங்களிப்பு மட்டும் ரூ.10.50 கோடியாகும். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.2.75 கோடியும், கர்நாடகாவில் ரூ.2 கோடியும், கேரளாவில் ரூ.1.25 கோடியும் வசூலாகியுள்ளது. இது தவிர, வெளிநாட்டுச் சந்தைகளில் (Overseas) இருந்து சுமார் ரூ.4 கோடி வசூலை இப்படம் அள்ளியுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த நிகர வசூல் (Net Collection) இந்திய அளவில் ரூ.14.40 கோடியாகப் பதிவாகியுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா – த்ரிஷா இணைந்து நடித்துள்ளதாலும், ஆர்.ஜே. பாலாஜியின் திரைக்கதை மற்றும் சாய் அபியங்கரின் பின்னணி இசை ஆகியவற்றாலும் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு காட்சிகளில் 75 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் நிரம்பின. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த வசூல் வேட்டை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் சினிமா வர்த்தக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version