சென்னை:
“ஒரு தேர்வின் மதிப்பெண்கள் மட்டுமே உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை” என்பதைத் தனது விடாமுயற்சியால் நிரூபித்துக் காட்டியுள்ளார் 23 வயது இளைஞர் சங்கத் குமார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு வெறும் இரண்டு மதிப்பெண்கள் வித்தியாசத்தில் JEE அட்வான்ஸ்டு தேர்வில் தகுதி பெறும் வாய்ப்பைத் தவறவிட்ட அவர், இன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) விஞ்ஞானி-பொறியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளார். இன்று நாடு முழுவதும் நீட் மறு-தேர்வு நடைபெற்று வரும் சூழலில், இந்த செய்தி தேர்வர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூப் மூலம் படித்து சாதனை
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த சங்கத் குமார், 2021-ல் தோல்வியடைந்தபோது மனம் தளரவில்லை. ஓராண்டு காலம் இடைவெளி (Gap year) எடுத்து, எவ்வித விலையுயர்ந்த பயிற்சி மையங்களுக்கும் செல்லாமல், முழுக்க முழுக்க யூடியூப் வீடியோக்கள் மற்றும் பழைய வினாத்தாள்களைக் கொண்டு சுயமாகப் படித்தார்.
அடுத்த ஆண்டே (2022) JEE தேர்வில் மாஸ் வெற்றி பெற்று, திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஐஐஎஸ்டி (IIST) கல்வி நிறுவனத்தில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பிரிவில் சேர்ந்தார்.
மாறுபட்ட சிந்தனை தந்த வெற்றி
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, பெரும்பாலான மாணவர்கள் வழக்கமான பிரிவுகளைத் தேர்ந்தெடுத்த நிலையில், சங்கத் குமார் யாரும் அதிகம் தேர்ந்தெடுக்காத ‘அதிர்வுகள் மற்றும் ஒலியியல்’ (Vibration and Acoustics) என்ற பிரத்யேகப் பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படித்தார். இந்த வித்தியாசமான முடிவுதான் இஸ்ரோவின் மத்திய ஆட்சேர்ப்பு வாரிய (ICRB) நேர்காணலில் அவரைத் தனித்து நிக்கச் செய்தது.
ஐஐஎஸ்டி-யில் 8.2 CGPA மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற சங்கத் குமார், இஸ்ரோ நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, தற்பொழுது நெல்லை மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் (IPRC) விஞ்ஞானியாகத் தனது பணியைத் தொடங்கவுள்ளார். ராக்கெட் ஏவுதலுக்கு முந்தைய இறுதிச் சோதனைகள் நடைபெறும் மிக முக்கிய தளம் இதுவாகும்.
நீட் தேர்வர்களுக்குச் சொல்லும் மெசேஜ்:
“தோல்விகள் தற்காலிகமானவை. கனவுகள் உறுதியாக இருந்தால் காலமும், நீங்கள் நிற்கும் களமும் ஒரு பொருட்டல்ல. உங்களின் கடின உழைப்பும், சாமர்த்தியமான படிப்புத் திறனும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். இன்று நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் வெற்றி, தோல்வி குறித்த கவலைகளை விடுத்து, மனம் தளராமல் நம்பிக்கையுடன் அடுத்த கட்டத்திற்குத் தயாராக வேண்டும்.”


