லாஸ் ஏஞ்சல்ஸ்: 2026 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில், உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள பலம் வாய்ந்த பெல்ஜியம் அணியின் 7 கோல் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தி, ஈரான் அணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க டிரா (0-0) தேடித்தந்துள்ளார் கோல்கீப்பர் அலிரேசா பெயரான்வண்ட் (Alireza Beiranvand). அரசியல் பதற்றங்கள் மற்றும் கடுமையான வறுமையைத் தாண்டி, அவர் உலகக் கோப்பை அரங்கில் படைத்துள்ள இந்த வீரம் செறிந்த சாதனை தற்போது உலகையே உற்றுநோக்க வைத்துள்ளது.

தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் ஈரான் அணிக்கு பல நெருக்கடிகள் உள்ளன. விசா கட்டுப்பாடுகள் காரணமாக அமெரிக்காவிற்குள் ஈரான் அணியால் பயிற்சி முகாம் அமைக்க முடியாமல், மெக்சிகோ எல்லையில் முகாம் அமைத்து, போட்டிக்கு 24 மணி நேரத்திற்கு முன்புதான் அமெரிக்காவிற்குள் நுழையும் அவல நிலை உள்ளது. மேலும் மைதானத்திற்கு வெளியேயும் பல்வேறு அரசியல் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இத்தனை அழுத்தங்களுக்கு மத்தியில், பெல்ஜியம் அணிக்கு எதிரான போட்டியில் அலிரேசா பெயரான்வண்ட் காட்டிய அசாத்திய ஆட்டம், அவரது ஒட்டுமொத்த வாழ்க்கைப் போராட்டத்தின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுகிறது.

யார் இந்த அலிரேசா பெயரான்வண்ட்? ஈரானின் லோரெஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு நாடோடி குர்திஷ் பழங்குடி குடும்பத்தில் பிறந்தவர் அலிரேசா. சிறு வயதில் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்ட இவருக்கு, கால்பந்து விளையாட அவரது தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கால்பந்து கிளவுஸ் (Gloves) வாங்குவது கூட தங்களது ஏழ்மைக்கு ஆடம்பரம் என்று தந்தை தடுத்ததால், தனது கனவை நனவாக்க ஒரு டீன்ஏஜ் வயதில் வீட்டை விட்டு ஓடி தலைநகர் தெஹ்ரானுக்கு பஸ் ஏறினார் அலிரேசா.

சாலையோரம் தூக்கம்… கார் வாஷில் வேலை: தெஹ்ரான் நகருக்கு வந்த அவரிடம் தங்குவதற்கு இடமோ, கையில் பணமோ இல்லை. பல மாதங்கள் உள்ளூர் கால்பந்து கிளப் மைதானங்களின் வெளியேயுள்ள தெருக்களிலேயே படுத்து உறங்கினார். பசியைப் போக்கிக் கொள்ளவும், கால்பந்து பயிற்சி பெறவும் அவர் செய்யாத வேலைகளே இல்லை. தெருக்களைப் பெருக்குவது, கார் வாஷில் டயர்களைக் கழுவுவது, ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்வது மற்றும் நள்ளிரவு பீட்சா கடையில் மாவு பிசைவது எனப் பல கடின உழைப்புகளுக்குப் பிறகே அவருக்குக் கால்பந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

இரட்டை கின்னஸ் உலக சாதனை (Double Guinness Records): சிறு வயதில் மலைப் பகுதிகளில் ஆடு மேய்க்கும்போது, ஓநாய்களிடம் இருந்து ஆடுகளைக் காப்பாற்ற கனமான கற்களை வெகுதூரத்திற்குத் தூக்கி எறியும் ‘தல்பாரன்’ (Dalparan) என்ற உள்ளூர் விளையாட்டை விளையாடியுள்ளார் அலிரேசா. இந்த சிறுவயது பழக்கம் அவரது கைகளுக்கு அசாத்திய பலத்தைத் தந்தது.

இதன் விளைவாக, கால்பந்து வரலாற்றிலேயே இரண்டு பிரம்மாண்ட கின்னஸ் உலக சாதனைகளை அவர் படைத்துள்ளார்:

  1. மிக நீளமான த்ரோ (Longest Throw): 2016-ல் தென்கொரியாவுக்கு எதிரான போட்டியில், கைகளாலேயே பந்தை சுமார் 200.14 அடி (61.002 மீட்டர்) தூரத்திற்கு எறிந்து முதல் கின்னஸ் சாதனை படைத்தார்.
  2. மிக நீளமான டிராப் கிக் (Longest Drop Kick): கால்பந்தைத் தரையில் உதைத்து 255.95 அடி (78.014 மீட்டர்) தூரத்திற்கு அனுப்பி இரண்டாவது கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

கடந்த 2018 உலகக் கோப்பையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெனால்டி கிக்கைத் தடுத்து உலகப் புகழ்பெற்ற அலிரேசா, தற்போது 2026 உலகக் கோப்பையிலும் பெல்ஜியத்தின் நட்சத்திர வீரர் ரொமேலு லுகாகுவின் கடுமையான மோதலில் காயமடைந்தும், பின்வாங்காமல் 7 அசாத்திய ‘சேவ்களை’ (Saves) செய்து அசத்தியுள்ளார். வறுமையும், தடைகளும் தனது கனவை சிதைக்க முடியாது என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளார் இந்த ஈரானிய வீரன்!

Share.
Leave A Reply

Exit mobile version