அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டாவது முறை (Back-to-Back) சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையில் கோப்பையை வென்ற இந்தியா, தற்போது 2026-ல் மீண்டும் மகுடம் சூடி அசைக்க முடியாத பலத்தை நிரூபித்துள்ளது.
மேலும், டி20 உலகக்கோப்பையை மூன்று முறை (2007, 2024, 2026) வென்ற ஒரே அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக 2007-ல் தென்னாப்பிரிக்காவிலும், 2024-ல் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவிலும் கோப்பையை வென்ற இந்தியா, தற்போது முதன்முறையாகத் தனது சொந்த மண்ணில் உலகக்கோப்பையை உயர்த்திப் பிடித்துள்ளது. இதன் மூலம் ‘சொந்த மண்ணில் டி20 உலகக்கோப்பையை வென்ற முதல் அணி’ என்ற புதிய வரலாற்றையும் இந்தியா பதிவு செய்துள்ளது.
நியூசிலாந்து கேப்டன் சாண்ட்னர் “இதயங்கள் உடைந்தாலும் கோப்பையை வெல்வோம்” எனக் கூறியிருந்த நிலையில், பில்லியன் கணக்கான இந்திய ரசிகர்களின் இதயங்களை மகிழ்ச்சியில் நனைய வைத்துள்ளது இந்திய அணி. மைதானம் முழுவதும் மூவர்ணக் கொடி பறக்க, வாணவேடிக்கைகளுடன் இந்திய வீரர்கள் இந்த வரலாற்று வெற்றியைத் தங்களது ரசிகர்களுடன் கொண்டாடி வருகின்றனர்.

